அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகிய இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டுள்ள பிரபாத் ஜயசூரிய, ஜூலை மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.
>> இங்கிலாந்து செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி அறிவிப்பு
பிரபாத் ஜயசூரிய தான் அறிமுகமாகிய முதல் டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத்துக்கு அடுத்தப்படியாக, இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டியொன்றில் 12 விக்கெட்டுகளுக்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக மாறியிருந்தார்.
பாகிஸ்தான் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத் ஜயசூரிய, மொத்தமாக தான் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருடைய பிரகாசிப்புகள் தொடர்பில் மஹேல ஜயவர்தன குறிப்பிடுகையில்,
“அவர் நீண்ட நாட்களாக கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக அதிகமான முதற்தர போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. ரங்கன ஹேரத் ஒரு தசாப்தமாக ஆதிக்கத்தை செலுத்திவந்த காரணத்தால், பிரபாத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர், இலங்கை கிரிக்கெட்டானது இரண்டு இளம் சுழல் பந்துவீச்சாளர்களுடன் செல்ல ஆரம்பித்தது.
லசித் எம்புல்தெனிய தன்னுடைய அறிமுக தொடரிலும், அடுத்துவந்த தொடர்களிலும் சிறப்பாக செயற்பட்டார். பிரவீன் ஜயவிக்ரமவும் நன்றாக பந்துவீசினார். இதனால், பிரபாத் காத்திருக்க வேண்டியிருந்தது. கடந் சில வருடங்களாக சிறந்த பிரகாசிப்புகளை பிரபாத் வழங்கியதன் காரணமாக, தேர்வுக்குழுவினர் அதிகமான நம்பிக்கையை வைத்திருந்தனர். அதனை பிரபாத் தற்போது நிறைவேற்றியுள்ளார்” என்றார்.
பிரபாத் ஜயசூரியவுக்கு தற்போது 31 வயதாகும் நிலையில், அவருடையை கிரிக்கெட் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது தொடர்பிலும் மஹேல ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
“பிரபாத் ஜயசூரியவிடமிருந்து எதிர்வரும் சில வருடங்களுக்கு இலங்கை கிரிக்கெட் பயனை பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டு தொடர்களிலும் அவரை பயன்படுத்திக்கொள்ள முடியும். காரணம் இயற்கையாகவே அவர் சிறந்த பந்துவீச்சாளர். அவர் அதிகமான கிரிக்கெட் விளையாடியுள்ளதுடன், போட்டிகள் தொடர்பில் அறிந்துவைத்துள்ளார்.
எஸ்.எஸ்.சி கழகத்துக்காக விளையாடும் போது, அருகிலிருந்து அவரை பார்த்துள்ளேன். சிறந்த பந்துவீச்சு பாணியை அவர் கொண்டுள்ளதுடன், நேர்த்தியாக ஒரே இடத்தில் பந்துவீசக்கூடியவர். வெளிநாட்டு ஆடுகளங்களை பொருத்தவரை சரியான இடங்களில் பந்துகளை வீசும் போது, அவருடைய உயரத்துக்கு ஏற்ப, பந்தில் பௌண்ஸ்களை ஏற்படுத்த முடியும். எனவே, இலங்கை அணியை எதிர்காலத்தில் முன்னேற்றப்பாதையை நோக்கி அவர் அழைத்துச்செல்வார் என எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தொடரை சமப்படுத்திய பின்னர், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளை இலங்கை கொண்டிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறது. எனினும், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெறுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
>> லெஜண்ட்ஸ் கண்காட்சிப்போட்டியில் விளையாடவுள்ள சனத், முரளி
“இலங்கை கடந்தகாலமாக மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகின்றது. குறிப்பாக உள்ளூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் தொடர்ச்சியான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது இலகுவான விடயமாக இருக்காது. காரணம், இந்த பருவகாலத்தின் இறுதியில் இலங்கையிடம் அதிகமான போட்டிகள் இல்லை. ஆனால், அடுத்து நடைபெறவுள்ள தொடர் மிகவும் முக்கியமானது. அடுத்துவரும் வெளிநாட்டு தொடர்களின் போட்டிகளை வெற்றிக்கொள்ள முடியுமானால், கட்டாயமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், ஏனைய அணிகளின் சில போட்டி முடிவுகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமையவேண்டும்” என்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<