FFSL இடைக்கால நிர்வாகம் குறித்த செய்திகள் பொய்யானவை – ஜஸ்வர் உமர்

286

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) இந்த மாதம் 31ஆம் திகதி கலைக்கப்படவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை என இலங்கை கால்பந்து சம்மேளன தலைவரான ஜஸ்வர் உமர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அனைத்து விளையாட்டு சம்மேளனங்களுக்குமான காலக்கெடு இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள போதும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் யாப்பு திருத்தங்களை இடைநிறுத்துமாறு இரண்டு லீக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக யாப்பு திருத்தங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜஸ்வர் உமர், அதன் அடிப்படையில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இடைக்கால நிர்வாகத்திற்கு இலங்கையில் ஒரு போதும் இடமளிக்காது எனவும் தெரிவித்திருக்கின்றார்.

அதேநேரம், யாப்பு திருத்தங்களுக்கான திகதிகளும், புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான திகதிகள் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இன்னும் சர்வதேச கால்பந்து சம்மேளன (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) அதிகாரிகள் மிக விரைவில் இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக தெரிவித்த ஜஸ்வர் உமர், அவர்கள் இலங்கையின் கால்பந்து விளையாட்டுக்கு தேவையான அனைத்தினையும் செய்து தரவிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<