அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய குழாத்திலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.
பும்ராவின் முதுகுப்பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான T20I தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த இவர், T20 உலகக்கிண்ணத்திலும் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியிலிருந்து வெளியேறும் ஸ்டொயினிஸ்!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் T20I போட்டிக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின்போது, முதுகுப்பகுதியில் வலியை உணர்வதாக வைத்தியர்களிடம் பும்ரா கூறியுள்ளார்.
அதன்பின்னர் சிகிச்சைகளை மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வைத்தியர்கள் மேலதிக சிகிச்சைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளுக்காக பெங்களூருக்கு அவரை அனுப்பிவைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் மற்றும் வைத்தியக்குழுவின் ஆலோசனையின்படி, பும்ராவால் T20 உலகக்கிண்ணத்தில் விளையாடமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜஸ்ப்ரிட் பும்ரா T20 உலகக்கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜஸ்ப்ரிட் பும்ரா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான மாற்றுவீரரை இந்திய கிரிக்கெட் சபை தற்போது அறிவிக்கவில்லை. எனினும், எதிர்வரும் நாட்களில் மாற்றுவீரர் அறிவிக்கப்படுவார் என இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
T20 உலகக்கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குழாத்தை பொருத்தவரை மொஹமட் சமி மற்றும் தீபக் சஹார் ஆகியோர் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் அல்லது தென்னாபிரிக்க தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ள மொஹமட் சிராஜ் உலகக்கிண்ண குழாத்தில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<