2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்றார் பும்ரா

ICC Awards 2024 

28
ICC Awards 2024 

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இன் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினை இந்தியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை கைப்பற்றிய முதல் இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீரங்கனைகள் இந்த கௌரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு 4 பெயர்களை ஐசிசி பரிந்துரைத்தது. அதன்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கையின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ், இங்கிலாந்து வீரர்களான ஜோ ரூட் மற்றும் ஹெரி ப்ரூக் ஆகியோரை பரிந்துரைத்தது.

அதன்படி, கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவை வெற்றியாளராக ஐசிசி அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு காயத்திலிருந்து மீண்டுவந்த ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆண்டில் 13 போட்டிகளில் 71 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். அதன் வாயிலாக கடந்த வருடம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக அவர் இடம்பிடித்தார். மேலும் இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையும் அவர் படைத்தார். இதுதவிர, 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 20 இற்கும் குறைந்த சராசரியில் 200 விக்கெட்டுகளை லீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

அதுமாத்திரமின்றி, 2024இல் மொத்தமாக 357 ஓவர்களை வீசியுள்ள பும்ரா, ஒரு ஓவருக்கு 2.96 ஓட்டங்கள் என்று மிகச் சிறந்த சிக்கன விகிதத்தை பெற்றுள்ளார். 30.1 ஸ்டிரைக் ரேட்டில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இவ்வாறு கடந்த ஆண்டு பந்துவீச்சில் கலக்கிய பும்ரா, 2024ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி இன் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

மேலும், ஐசிசி இன் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜொன்சன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் அந்த விருதை வென்றுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, இதற்கு முன்பு ராகுல் டிராவிட் 2004ஆம் ஆண்டிலும், கௌதம் கம்பீர் 200ஆம் ஆண்டிலும், விரேந்திர சேவாக் 2010ஆம் ஆண்டிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2016ஆம் ஆண்டிலும், விராட் கோலி 2018ஆம் ஆண்டிலும் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற இந்திய வீரராகவும் பும்ரா இடம்பிடித்தார்.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<