2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ராவும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமெலியா கெரும் வென்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டில் டெஸ்ட் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் பும்ராவிற்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது.
இந்த விருதுக்கு அவுஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மற்றும் ஹெரி ப்ரூக் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், இவர்கள் அனைவரையும் பின்தள்ளி பும்ரா இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார்.
இதன்மூலம் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டும், 2010ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2016ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வினும், 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் விராட் கோலியும் இந்த விருதை வென்றுள்ளனர். அதேபோல, இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது.
31 வயதான பும்ராவிற்கு 2024ஆம் ஆண்டு மகத்தான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவுக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 71 விக்கெட்டுகளையும், 8 T20I போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்ல ஜஸ்பிரித் பும்ரா முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் மட்டும் 4.17 என்ற சராசரியுடன், 8.26 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, தொடர் நாயகன் விருதை வென்றார்.
- 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்றார் பும்ரா
- ஐசிசி இன் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்
- ஐசிசி ஒருநாள் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமனம்
அதேபோல, ஜஸ்பிரித் பும்ரா 2024ஆம் ஆண்டு மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 357 ஓவர்கள் வீசி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம்; கடந்த 2024ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் ஜஸ்பிரித் பும்ரா சதனை படைத்ததார்.
2024 ஆரம்பத்தில் கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா, இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அதுமாத்திரமின்றி, அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான செயல்பாடுகள் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சு தவரிசை புள்ளிகளில் பிரதிபலித்தது. டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா 900 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 900 புள்ளிகளைக் கடந்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.
இதுதவிர்த்து 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் வென்ற பும்ரா, 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி T20 அணி மற்றும் 2024ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து ஜஸ்பிரித் பும்ரா கருத்து தெரிவிக்கையில், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இளம் வயதிலிருந்து எனது ஹீரோக்கள் இந்த மிகப் பெரிய ஐசிசி விருதினை வென்றதைப் பார்த்திருக்கிறேன். அதனால், அவர்களுடன் நானும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை வென்றது மிகவும் சிறப்பானது. T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது நிறைய மனதுக்கு நெருக்கமான நினைவுகளைக் கொடுத்தது. அதனால், T20 உலகக் கிண்ணத்தை வென்றதையே மிகவும் மகிழ்ச்சியான தருணம் என முதலில் கூறுவேன். கடந்த ஆண்டில் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மிகவும் சிறப்பானது என்றார்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்ளின்ட் விருதை நியூசிலாந்து மகளிர் அணியின் சகலதுறை வீராங்கனை அமேலியா கேர் வென்றுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், நியூசிலாந்து மகளிர் அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல, கடந்தாண்டு மகளிர் T20 கிரிக்கெட்டில் 387 ஓட்டங்கள் மற்றும் 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதுதவிர ஒருநாள் கிரிக்கெட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமேலியா கேர், 224 ஓட்டங்களையும், 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முன்னதாக 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி வளர்ந்து வரும் வீராங்கனை விருது மற்றும் ஐசிசி ஆண்டின் சிறந்த T20 வீராங்கனை விருது ஆகியவற்றையும் அமேலியா கேர் வென்றதுடன், 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் T20 அணி மற்றும் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<