வரலாற்றை மாற்றி கிரிக்கெட்டில் புது உச்சத்தை தொட்ட பும்ரா

England Tour India 2024

215

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுக் கொண்டார்.   

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது 

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன் செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 15ஆம் திகதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது 

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார் 

இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்ட்டில் பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் என 9 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். 

இது தவிர, இப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை பும்ரா படைத்தார். 

எவ்வாறாயினும், இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

இதன்மூலம், டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i என்று 3 வடிவங்களுக்குமான ஐசிசி இன் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். 

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இதுவரை முதலிடத்தைப் பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார். 

அதேபோல முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு இடங்கள் சரிந்து 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 2ஆம் இடத்திற்கு தென்னாபிரிக்காவின் கங்கிஸோ ரபாடா முன்னேறியுள்ளார். மறுபுறத்தில் இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இரண்டு இடங்கள் சரிந்து 9ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். மேலும், இப்பட்டியளின் முதல் 5 இடங்களில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒற்றை டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய, ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.    

இதனிடையே, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் அவுஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை வீரர் திமுத் கருணாரத்ன மட்டுமே 9ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் ஆஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதலிரண்டு இடங்களில் நீடித்து வருகின்றனர். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<