அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர்கொண்ட இங்கிலாந்து குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை (ECB) அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், பக்க பிடிப்பு உபாதை காரணமாக பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான T20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட, ஜேசன் ரோய் இடம்பிடித்துள்ளார்.
>> மற்றொரு இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ்
அதேநேரம், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 தொடரில், மிகச்சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி, T20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் டேவிட் மலான் ஒருநாள் குழாத்தில் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். T20 போட்டிகளில் கடந்த ஆண்டு அறிமுகமாகியிருந்த டேவிட் மலான் இதுவரையில் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.
இந்தநிலையில், ஏற்கனவே ஒருநாள் குழாத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த ஜோ டென்லி, குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர், T20 ப்ளாஸ்ட் தொடரில் கென்ட் அணிக்காக விளையாடவுள்ளார். இதேவேளை, மேலதிக வீரர்கள் பட்டியலில் பில் சோல்ட் மற்றும் சகிப் மஹ்மூட் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் விரல் உபாதை காரணமாக விலகியிருந்த இயன் மோர்கன், ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்தவுள்ளார். அதுமாத்திரமின்றி, தனிப்பட்ட காரணத்துக்காக மூன்றாவது போட்டியிலிருந்து விலகியிருந்த ஜோஸ் பட்லர், கொவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு பின்னர், அணிக்கு திரும்புவார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
“மென்செஸ்டரில் வைத்து ஜோஸ் பட்லர் அணியுடன் இணைந்துக்கொள்வார். அவர் அணியில் நிச்சயமாக விளையாடுவார். இயன் மோர்கனின் உபாதை குணமாகியுள்ளது. மார்க் வூர்ட் உடற்தகுதியுடன் உள்ளார். டேவிட் மலான் மேலதிக வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதுடன், பில் சோல்ட்டும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்” என இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.
>> Video – தனியாளாக சாதித்துக் காட்டிய Dinesh Chandimal | Cricket Galatta Epi 33
இங்கிலாந்து ஒருநாள் குழாம்
இயன் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயார்ஸ்டோவ், டொம் பென்டன், செம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், செம் கரன், டொம் கரன், ஆதில் ரஷீட், ஜோ ரூட், ஜேசன் ரோய், க்ரிஸ் வோகஸ், மார்க் வூட்
மேலதிக வீரர்கள் – பில் சோல்ட், டேவிட் மலான், சகீப் மஹ்மூட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<