அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அந்த அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார்.
மேஜர் கிரிக்கெட் லீக் ஜூலை 13 முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகள் அதே காலப்பகுதியில் நடைபெறுவதால், மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை வீரர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், குறித்த தொடரில் களமிறங்கும் கொல்கத்தா நிர்வகிக்கும் லொஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் 300,000 பவுண்ட்ஸ் விலைமதிப்பில் 2 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது இலங்கை பணப்பெறுமதியில் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.
ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் ஜேசன் ரோய்க்கு ஆண்டிற்கு 66,000 யூரோ மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மறுபுறம் இங்கிலாந்தில் நடைபெறும் T20 ப்ளாஸ்ட், பாகிஸ்தானில் நடைபெறும் PSL, இந்தியாவில் நடைபெறும் IPL என கடந்த ஓராண்டாக அவர் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் T20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். அதனால் ஏற்கனவே வாய்ப்பு கிடைக்காத இங்கிலாந்து அணியை மொத்தமாக தவிர்த்து T20 லீக் தொடர்களில் விளையாட முடிவெடுத்துள்ளதாகவும் அது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் கடந்த சில வாரங்களாகவே அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது இவ்வாறிருக்க, அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்காக ஜேசன் ரோய் இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் சபை இன்று உறுதி செய்துள்ளது.
- ஆஷஷ் தொடருக்கான குழாத்தில் இணையும் ஜிம்மி பீரிசன்
- ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான பரிசுத்தொகை அறிவிப்பு
- இந்திய – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல
இதுதொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளின் ஆரம்ப வீரர் ஜேசன் ரோய், இம்முறை கோடையில் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட்டுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு தெரிவித்தார். அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த அவருக்கு மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த முடிவு இங்கிலாந்து அணியின் எதிர்காலத் தேர்வுகளில் ஜேசன் ரோய்க்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அவர் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக தாம் நம்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தனது முடிவு குறித்து பேசியுள்ள ஜேசன் ரோய், தற்போது இங்கிலாந்து அணியுடனான அட்டவணையில் முரண்பாடுகள் இல்லாததால், மத்திய ஒப்பந்தம் இல்லாத ஒரு வீரராக இந்தப் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெற விரும்பினேன். அதேபோல, போட்டித் தன்மை கொண்ட லீக் தொடர்களில் விiயாடுவது என்பது இங்கிலாந்து வீரராக எனக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்றார்.
மேலும் தான் எப்போதும் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜேசன் ரோய் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 T20i போட்டிகளில் விளையாடி மொத்தமாக 5980 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.
இதேவேளை, அண்மையில் நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் இதே போலவே T20i கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக மத்திய ஒப்பந்;தத்திலிருந்து வெளியேறினார். அந்த வரிசையில் இங்கிலாந்து அணியிலிருந்து முதல் வீரராக ஜேசன் ரோய் இணைந்து கொண்டுள்ளார்.
இதற்கிடையே, ஜேசன் ரோய் மட்டுமல்லாது, அவரது சக வீரரான ரீஸ் டொப்லியும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடனான தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<