எலும்பு முறிவு காரணமாக T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸுக்குப் பதிலாக மார்கோ ஜொன்சென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் இந்த வாரம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்தார்.
எனினும், இந்திய அணிக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த T20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான தென்னாபிரிக்க அணியில் அவர் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டியில் டுவைன் பிரிட்டோரியஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எனினும், குறித்த போட்டியின் போது அவருக்கு இடதுகை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்தும், இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகும் T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்தும் டுவைன் பிரிட்டோரியஸ் விலகுவதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.
- T20 உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்க வீரர்
- T20 உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் ஜஸ்ப்ரிட் பும்ரா!
இந்த நிலையில் இந்தியாவுடானான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 22 வயதுடைய இடதுகை வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான மார்கோ ஜொன்சென் தென்னாபிரிக்க T20 உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் T20 அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட ஜொன்சன், இதுவரை ஒரேயொரு சர்வதேச T20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இதனிடையே, மேலதிக வீரர்களில் இடம்பெற்றிருந்த மார்கோ ஜொன்சனின் இடத்துக்காக வேகப்பந்து வீச்சாளர் லிஸாட் வில்லியம்ஸை இணைத்துக் கொள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் குழு இரண்டில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்க அணி, தனது முதல் போட்டியில் முதல் சுற்றில் தேர்வாகும் அணிக்கு எதிராக ஒக்டோபர் 24ஆம் திகதி விளையாடவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<