பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனரில் இலங்கை இராணுவத்துக்கு முதலிடம்

220

இலங்கையின் பாதுகாப்பை நிலைபெறச் செய்வதில் முன்நின்று செயற்படுகின்ற நிறுவனங்களான இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளும் இணைந்து 10 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனராக இலங்கை இராணுவத்தின் நீளம் பாய்தல் வீரர் ஜானக பிரசாத் விமலசிறியும், பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனராக இலங்கை இராணுவத்தின் மத்திய தூர ஓட்ட வீராங்கனையான நதீஷா ராமநாயக்கவும் தெரிவாகினர்.

இதேநேரம், மைதான நிகழ்ச்சிகளில் அதி சிறந்த வீரருக்கான விருதை இலங்கை இராணுவத்தின் நீளம் பாய்தல் வீரர் ஜானக பிரசாத் விமலசிறி பெற்றுக்கொள்ள, அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை பெண்களுக்கான முப்பாய்ச்சலில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவ வீராங்கனை விதூஷா லக்‌ஷானி பெற்றுக்கொண்டார்.

பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனரில் விதூஷா, சச்சினி புதிய போட்டி சாதனை

அத்துடன், சுவட்டு நிகழ்ச்சிகளில் அதி சிறந்த வீரருக்கான விருது ஆண்களுக்கான 800 மீற்றரில் தங்கப் பதக்கத்துடன், புதிய போட்டி சாதனை படைத்த இந்துனில் ஹேரத்துக்கும், அதி சிறந்த வீராங்கனைக்கான விருது பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்துடன், புதிய போட்டி சாதனை படைத்த நதீஷா ராமநாயக்கவுக்கும் வழங்கப்பட்டது.

இதேவேளை, இம்முறை போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடங்களைப் பெற்றுக் கொண்ட அணிகளுக்காக வழங்கப்படுகின்ற வருடத்தின் அதி சிறந்த படைப் பிரிவுக்கான விருதை இலங்கை இராணுவ அணி  பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற 10ஆவது பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர் கடந்த 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், இதில் முப்படைகளையும் சேர்ந்த சுமார் 500 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இம்முறை போட்டிகளில் ஒரு தேசிய சாதனையும், 15 போட்டி சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. இதில் பெண்களுக்கான ஏழு அம்சப் போட்டிகளில் (ஹெப்டெத்லன்) இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியிருந்த லக்‌ஷிகா சுகந்தி, 4911 புள்ளிகளைப் பெற்று புதிய தேசிய சாதனை படைத்தார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரிலும் அவர் தனது சொந்த சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளின் முதல் நாளில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குபற்றிய தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான விதூஷா லக்‌ஷானி, 13.58 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனை படைத்தார்.

இதேவேளை, இலங்கை இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா,பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

ஆசியாவில் சம்பியனாகும் கனவுடனே களமிறங்கினோம் – திலகா ஜினதாச

இந்த நிலையில், போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று (14) நடைபெற்ற ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளின் (டெகத்லன்) தேசிய சம்பியனான அஜித் குமார கருணாதிலக்க, 6961 புள்ளிகளைப் பெற்று புதிய போட்டி சாதனை படைத்தார்.

இதேநேரம், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ வீரர் இந்துனில் ஹேரத், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இஷார சந்தருவன், பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் ஷயாமா துலானி மற்றும் பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கடற்படை வீராங்கனை பி. பெரேரா ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, போட்டிகளின் மூன்றாம் நாளான இன்று (15) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார (9 நிமிடங்கள் 04.52 செக்.) புதிய போட்டி சாதனை நிலைநாட்டினர்.

அத்துடன், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட இலங்கை இராணுவத்தின் சன்ஜய ஜயசிங்க 13.60 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையும், ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் கடற்படை வீரர் கயான் ஜயவர்தன 54.33 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையும் நிகழ்த்தியிருந்தனர். குறித்த இருவரும், அந்தந்த போட்டிப் பிரிவுகளில் தேசிய சம்பியன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை இராணுவ அணி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

சுகந்திக்கு ஹெட்ரிக் வெற்றி

பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் இரும்புப் பெண் என அழைக்கப்படுகின்ற லக்‌ஷிகா சுகந்தி, புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 14.08 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, பெண்களுக்கான ஹெப்டெத்லனில் தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற லக்ஷிகா, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை இராணுவ அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

இதேநேரம், இன்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட லக்‌ஷிகா, தெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்கவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை 12.05 செக்கன்களில் அவர் நிறைவுசெய்தார்.

இம்மாதம் ஆரம்பமாகும் 88வது சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்

இதன்படி, இம்முறை பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 10 போட்டிகளில் பங்குபற்றிய லக்‌ஷிகா சுகந்தி, ஒரு தேசிய சாதனை, ஒரு போட்டி சாதனையுடன் 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.

நதீஷாவின் அதி சிறந்த காலம்

இன்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.03 செக்கன்களில் நிறைவு செய்த நதீஷா ராமநாயக்க புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அத்துடன், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.03 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கையின் நான்காவது வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக தமயன்தி தர்ஷா, சந்திரிகா சுபாஷினி, மேகா விக்ரமசிங்க ஆகியோர் 53.00 செக்கன்களில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியை நிறைவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அதே போட்டியை 54.04 செக்கன்களில் நிறைவு செய்த ரத்னகுமாரி வெள்ளிப் பதக்கத்தையும், 54.29 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த நிமாலி லியனாரச்சி  வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னாள் தேசிய சம்பியனான திலிப் ருவனை வீழ்த்தி அஜித் பிரேமகுமார தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை 46.90 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார்.

முன்னதாக நேற்று முன்தினம் (13) நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் அஜித் பிரேமகுமார தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிவேக வீரர்களாக ஹிமாஷ, ருமேஷிகா தெரிவு

வருடத்தின் அதிவேக முப்படை வீரரைத் தெரிவு செய்கின்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஹிமாஷ ஏஷான் தங்கப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 10.62 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார்.

இதில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எஸ்.குமார வெள்ளிப் பதக்கத்தையும், மொஹமட் அஷ்ரப் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேநேரம், வருடத்தின் அதிவேக முப்படை வீராங்கனையாக ருமேஷிகா ரத்னாயக்க தெரிவானார். 11.91 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை ருமேஷிகா ரத்னாயக்க வெற்றிகொள்ள, அவருக்குப் பலத்த போட்டியைக் கொடுத்த லக்‌ஷிகா சுகந்தி (12.05 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், விமானப்படை வீராங்கனை என். மதுஷிகா (12.15 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இராணுவத்துக்கு முதலிடம்

தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இம்முறை பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 34 தங்கம், 26 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 79 பதக்கங்களை வென்ற இலங்கை இராணுவ அணி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன் 275 புள்ளிகளையும் அந்த அணி பெற்றுக்கொண்டது.

7 தங்கம், 15 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களை வென்று 105 புள்ளிகளுடன் இலங்கை விமானப்படை அணி இரண்டாவது இடத்தையும், 5 தங்கம், தலா 6 வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் 57 புள்ளிகளைப் பெற்று இலங்கை கடற்படை அணி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இறுதியாக, இம்முறை பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் பரிசளிப்பு நிகழ்வு முப்படை தளபதிகளின் தலைமையில் இடம்பெற்றதுடன், போட்டிகளில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க