ஓய்வு முடிவை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

107

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (11) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கேட்டுகொண்டதால், ஆண்டர்சன் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையுடன் ஆண்டர்சன் ஓய்வு பெறுவார்.

எவ்வாறாயினும், இன்னும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சினின் சாதனையை அவரால் சமன் செய்திருக்க முடியும்.

இதனிடையே, ஓய்வு முடிவு தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘இந்த கோடைக்காலத்தில் லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் இருந்து நான் விரும்பிய விளையாட்டை விளையாடியதுடன், 20 ஆண்டுகளுகளுக்கு மேல் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியது நம்ப முடியாத ஒன்றாகும். ஆனால் தற்போது இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறேன்.

இருப்பினும், நன் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என நான் நினைக்கிறேன். என்னுடைய கனவை போல் மற்றவர்களின் கனவுகளும் நனவாகட்டும். டேனியல்லா, லோலா, ரூபி மற்றும் எனது பெற்றோர் அவர்களது அன்பும் ஆதரவும் இன்றி இதனை நான் செய்திருக்க முடியாது. அவர்களுக்கு எனது மிகப் பெரிய நன்றி. இங்கிலாந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்குகின்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக 2002ஆம் ஆண்டு அறிமுகமானார். 2002ஆம் ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். அடுத்த வருடம் 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக T20i கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

41 வயதைக் கடந்தும் உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருகின்ற அவர், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதே சமயத்தில் 296 முதல்தர போட்டிகளில் 1,114 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருக்கிறார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். இதில் 32 தடவைகள் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை அவரையே சேரும்.

முதலிரெண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் (800), அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோர்னும் (708) உள்ளனர். இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால் ஷேன் வோர்னின் சாதனையை சமன் செய்வார்.

அதுமட்டுமின்றி, இங்கிலாந்து அணிக்காக 194 போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 T20i போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<