சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப் பந்துவீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்று அசத்தியது. அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ஓட்டங்களைக் குவித்தது.
இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கிய முன்னணி நடுவர்
- நியூசிலாந்தின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் திடீர் ஓய்வு
- சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கும் இங்கிலாந்து வீரர்
அதன்படி நேற்றைய ஆட்டத்தில் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தியிருந்த அவர், அதன்பின் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் குல்தீப் யாதவ்வின் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப் பந்துவீச்சாளர் எனும் உலக சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். இதில் மற்றுமொரு இங்கிலாந்து வீரரான ஸ்டுவர்ட் பிரோட் 604 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார்.
அத்துடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். இந்தப் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடனும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
இதனிடையே, ஜேம்ஸ் ஆண்டர்சன் மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 21 ஆண்டுகளுக்கு முன் 2003இல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2ஆவது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<