சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி

1657
Image Courtesy - Getty Image

விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன்  மூலம் தெரிவாகியுள்ளது.

இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெறும் தருவாயினை தற்போது நெருங்கியுள்ளன. வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வீரர்களினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 10  போட்டிகளில் விளையாடி தொடரின் அடுத்த கட்டமான பிளே ஒப் சுற்றிற்கு வாய்ப்பினை பெறும்.

இத்தொடரின் பிளே ஒப் சுற்றிற்கு திரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஏற்கனவே தெரிவாகியுள்ள நிலையில்,  குமார் சங்கக்கார தலைமையிலான தொடரின் நடப்பு சம்பியன் ஆன ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்ய, கிரிஸ் கெய்ல் தலைமையிலான சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை தீர்க்கமான இன்றைய குழுநிலை ஆட்டத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

கிங்ஸ்டன் நகரத்தின் சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கியிருந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிரிஸ் கெயில் தரப்பு முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியிற்கு வழங்கியிருந்தது.

தொடர்ந்து ஜமெய்க்கா அணி சார்பாக துடுப்பாட லென்ட்ல் சிம்மோன்ஸ் மற்றும் கிளேன் பிலிப்ஸ் ஆகியோர் மைதானம் விரைந்தனர்.

போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த லென்ட்ல் சிம்மோன்ஸ் தனது அணி ஜமெய்க்காவிற்கு மோசமான ஆரம்பத்தினைப் தந்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் மைதானம் விரைந்த இலங்கை அணியின் குமார் சங்கக்கார சமார்த்தியமான தனது துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி ஏனைய ஆரம்ப வீரர் கிளேன் பிலிப்ஸ் உடன் இணைந்து ஓட்டங்கள் சேர்க்க தொடங்கினார்.

முதல் விக்கெட்டுக்காக இரண்டு வீரர்களினாலும் 81 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெறப்பட்டது. இரண்டாம் விக்கெட்டாக பறிபோன பிலிப்ஸ் ஆப்கானிஸ்தான் வீரர் முஹம்மட் நபியின் பந்துவீச்சில் பிடியொன்றினைக் கொடுத்து 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இவரின் விக்கெட்டினை தொடர்ந்து சீரான இடைவெளியில் மூன்றாவது விக்கெட்டினையும் பறிகொடுத்த ஜமெய்க்கா தல்லாவாஸ அணியை சங்கக்கார அரைச்சதம் கடந்து  மேலும் வலுப்படுத்தினார்.

அணியின் நான்காவது விக்கெட்டாக பறிபோன சங்கக்காரவினால் மொத்தமாக 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தன.

தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் தேசிய அணி வீரர் ரொவ்மேன் பொவேல் இன் அதிரடி காட்ட, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி 157 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.

அதிரடியாக ஆடியிருந்த பொவேல் வெறும் 26 பந்துகளிற்கு 3 அபார சிக்ஸர்கள், 2 பெளண்டரிகள் உடன் 46 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியின் பந்து வீச்சு சார்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் செல்ட்டன் கொல்ட்ரல் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்டங்களினை 20 ஓவர்களில் பெற களமிறங்கிய சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியில் ஆரம்ப வீரரும் அணித்தலைவருமான கிரிஸ் கெயில் ஓட்டம் ஏதுமின்றி ஓய்வறை திரும்பி ஏமாற்றினார்.

எனினும், ஏனைய ஆரம்ப வீரரான ஈவான் லூயிஸ் சிறிது அதிரடி காட்டி அணியினை வெற்றிப்பாதையிற்கு அழைக்க முயற்சித்திருந்தார். அவரின் விக்கெட்டினை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சமி கைப்பற்ற போட்டியின் முடிவு ஜமெய்க்கா அணியிற்கு சாதமாகியது.

தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரினையும் வேகப்பந்த்து வீச்சாளர்களான ஒசானே தோமஸ் மற்றும் கிரிஸ்மர் சன்டோக்கி ஆகியோர் விரைவாக ஓய்வறை அனுப்ப முடிவில், 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி 116 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஈவின் லூயிஸ் 40 ஓட்டங்களினை குவித்திருந்தார். எதிரிணியினை பந்து வீச்சில் மிரட்டியிருந்த சன்டோக்கி மற்றும் தோமஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் வெற்றி மூலம் கிடைத்த புள்ளிகளினால், தொடரின் புள்ளிகள் இரண்டாம் இடத்திற்கு  முன்னேறிய ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரின் பிளே ஒப் சுற்றிற்கும் முன்னேறியது.

போட்டியின் சுருக்கம்

ஜமெய்க்கா தல்லாவாஸ் – 157/5 (20) குமார் சங்கக்கார 69, ரொவ்மேன் பொவேல் 43, செல்ட்டன் கொல்ட்ரல் 2/38

சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் – 116 (17.5) ஈவின் லூயிஸ் 40, மொஹமட் ஹபீஸ் 21, கிரிஸ்மர் சன்டோக்கி 3/10, ஒசானே தோமஸ் 3/31

போட்டி முடிவுஜமெய்க்கா தல்லாவாஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி

Point Table