ஜப்னா வொலிபோல் லீக் பிளே-ஓஃப் சுற்றில் மோதும் பலமிக்க அணிகள்

Jaffna Volleyball League 2021

486
JVL

யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்றுவரும் ஜப்னா வொலிபோல் லீக் (Jaffna Volleyball League) தொடரின் பிளே-ஓஃப் சுற்றுக்கு, ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ், அரியாலை கில்லாடிகள் 100, சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி மற்றும் ரைஸிங் ஐலண்ட்ஸ் ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளன.

யாழ். மாவட்டத்தை பிரதநிதித்துவப்படுத்தும் கரப்பந்தாட்ட வீரர்களை ஏல முறையில் அணிகளில் இணைத்து முதன்முறையாக கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட, ஜப்னா வொலிபோல் லீக் தொடர் கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட ஜப்னா வொலிபோல் லீக்

அந்தவகையில் மீண்டும் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்ட போட்டித்தொடரின்,  12 போட்டிகள் கடந்த 18, 19, 21 மற்றும் 22ம் திகதிகளில் நடைபெற்றன. இதில், 18ம் திகதி ஆரம்பித்த போட்டிகளில், அரியாலை கில்லாடிகள், சங்கானை மக்களொன்றிய செலஞ்சர்ஸ், அச்சுவேலி கிங் பைட்டர்ஸ் மற்றும் நீர்வை பசங்க ஆகிய அணிகள் வெற்றிகளை பதிவுசெய்தன.

இதில், ரைசிங் ஐலண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை, அரியாலை கில்லாடிகள் அணி 3-0 என கைப்பற்றியதுடன், சங்கானை மக்களொன்றிய கழகம், வலவையூர் வொலி வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 3-0 என கைப்பற்றியது. மற்றுமொரு போட்டியில், ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் அணியை எதிர்கொண்ட அச்சுவேலி கிங் பைட்டர்ஸ் அணி 3-0 என வெற்றியை பதிவுசெய்ய, அன்றைய தினத்தின் இறுதிப்போட்டியில், மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தி நீர்வை பசங்க அணி போட்டியில் வெற்றிகொண்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 19ம் திகதியும் 4 லீக் போட்டிகள் நடைபெற்றிருந்தன.

இதில், முதல் போட்டியில்  சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணியானது, சங்கானை மக்களொன்றிய செலஞ்சர்ஸ் அணியை 3-0 என வீழ்த்தியதுடன், அரியாலை கில்லாடிகள், வலவையூர் வொலி வொரியர்ஸ் ஆகிய அணிகள், முறையே ஸ்புட்னிக் நோர்த் போல் மற்றும்  நீர்வை பசங்க அணிகளை 3-0 என வீழ்த்தின. அத்துடன், அன்றைய தினம் நடைபெற்ற அச்சுவேலி கிங் பைட்டர்ஸ் அணிக்கு  எதிரான போட்டியை மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் அணி 3-1 என கைப்பற்றியிருந்தது.

இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி மின்வெளிச்சத்தின் கீழ் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ரைஸிங் ஐலண்ட்ஸ் அணி 2-1 என போட்டியில் வெற்றிபெற்று, தங்களுடைய பிளே-ஓஃப் சுற்றுக்கான வய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. அன்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், நீர்வை பசங்க அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அணியை 3-0 என இலகுவாக வீழ்த்தியிருந்தது. எனினும், இவர்களால் பிளே-ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இறுதியாக கடந்த 22 ஆம் திகதி லீக் சுற்றில் மிகுதியிருந்த இரண்டு போட்டிகளும் மின்வெளிச்சத்தின் கீழ் நடைபெற்றன. முதல் போட்டியில் மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் மற்றும் அரியாலை கில்லாடிகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஐந்தாவது செட்டின் நிறைவில் 3-2 என்ற செட்கள் கணக்கில் மட்டுவில் ஸ்பைக்கர்ஸ் அணி வெற்றிகொண்டது. எனினும், இந்த அணியால் தொடரின் நிறைவில் 6 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

தொடரின் இறுதி லீக் போட்டியில் அரியாலை கிங் பைட்டர்ஸ் மற்றும் வலவையூர் வொலி வொரியர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில், அரியாலை கிங் பைட்டர்ஸ் அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பதிவுசெய்திருந்தது.

அந்தவகையில், இறுதி தரவரிசைப்படுத்தலின்படி, ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 20 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டதுடன், இரண்டாவது இடத்தை 4 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று, அரியாலை கில்லாடிகள் அணி பிடித்துக்கொண்டது.  மூன்றாவது இடத்தை 13 புள்ளிகளுடன் சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணி பிடித்திருந்த நிலையில், நான்காவது இடத்தை 12 புள்ளிகளுடன் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணி பிடித்துக்கொண்டது.

அதன்படி, புள்ளிப்பட்டியலில், முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள இரண்டு அணிகளும், முதலாவது குவாலிபையர் போட்டியில் விளையாடும். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்பதுடன், தோல்வியடையும் அணி, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கான எலிமினேட்டர் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன், இரண்டாவது குவாலிபையர் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். குறிப்பிட்ட இந்த இரண்டாவது குவாலிபையரில் வெற்றிபெறும் அணி, முதல் குவாலிபையரில் வெற்றிபெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் இன்றைய தினம் (26) மின்வெளிச்சத்தின் கீழ் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது குவாலிபையர் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<