யாழ். மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஜப்னா வொலிபோல் லீக்கின் (JVL), முதலாவது குவாலிபையர் போட்டியில் வெற்றிபெற்ற ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்திய ரைசிங் ஐலண்ட்ஸ் அணி, சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணியை வீழ்த்தி, இரண்டாவது குவாலிபையர் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
>>ஜப்னா வொலிபோல் லீக் பிளே-ஓஃப் சுற்றில் மோதும் பலமிக்க அணிகள்
முதலாவது குவாலிபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நேற்றைய தினம் (26) இரவுநேர போட்டிகளாக, மின்வெளிச்சத்தின் கீழ் நடைபெற்றிருந்தன. இதில், முதலாவது குவாலிபையர் போட்டியில், ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி, அரியாலை கில்லாடிகள் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்து மிகச்சிறந்த திறமைகளை ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியினர் வெளிப்படுத்தியிருந்தனர். அதன்படி, முதல் இரண்டு செட்களையும் 25-19 மற்றும் 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியினர் வெற்றிக்கொண்டனர்.
எனினும், இதற்கு அடுத்தப்படியாக ஆவாரங்கால் அணியின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய மூன்றாவது செட்டில் பதிலடி கொடுத்த, அரியாலை கில்லாடிகள் அணி 25-18 என மூன்றாவது செட்டை கைப்பற்றியது. எவ்வாறாயினும், நான்காவது செட்டில் சிறப்பாக விளையாடிய ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணி, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை கைப்பற்றியதுடன், 3-1 என போட்டியில் வெற்றிபெற்றது. அதன்படி, இந்த தொடரின் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு, ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியினர் முன்னேறினர்.
அதேநேரம் அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அச்சுவேலி அணியை எதிர்கொண்டு விளையாடிய ரைஸிங் ஐலண்ட்ஸ் அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றது.
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட் 25 –17 என்ற அடிப்படையில் நிறைவுக்கு வந்தது. இதில், ரைஸிங் ஐலண்ட்ஸ் அணி வெற்றிக்கொண்டது. எனினும், இரண்டாவது செட் மேலும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இறுதிநேரத்தில் 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் சென்ரல் ஸ்பைக்கர்ஸ் அணி வெற்றிபெற, ஆட்டம் 1-1 என சமனிலையடைந்தது.
எவ்வாறாயினும், அடுத்த இரண்டு செட்களையும் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணி 25-22 மற்றும் 25-14 என இலகுவாக கைப்பற்றி, இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றது.
எனவே, இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ரைஸிங் ஐலண்ட்ஸ் அணியானது, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியடைந்த அரியாலை கில்லாடிகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது. குறித்த இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில், ஆவாரங்கால் கிங் பைட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<