யாழ். மாவட்டத்தில் கழகமட்ட கிரிக்கெட் விளையாட்டினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் T20 லீக் போட்டித் தொடர் ஒன்றினை யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் ஏற்பாடு செய்துவருகின்றனர்.
“Jaffna Super League” என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த போட்டித் தொடரிற்கு யாழ் மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையமாகக்கொண்ட 08 அணிகள் உருவாக்கப்படும். போட்டித் தொடரில் அணியின் உரிமையாளராக ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்வித் தொகையினை யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும். கேள்வித் தொகையின் அடிப்படையில், அதிகூடிய தொகையினை முன்வைத்த முதல் 08 விண்ணப்பதாரிகளும் அணிகளின் உரிமையாளர்களாக ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.
ஜி.பி.எல் 2018 தொடரின் சம்பியனாக நாமம் சூடிய டீப் டைவர்ஸ்
யாழ்ப்பாணம் கிறாஸ்ஹொப்பர்ஸ் …
அணிகளின் உரிமையாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (16.09.2018) உறுதி செய்யப்படுவர். அதன் பின்னர் வீரர்கள் ஏலத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறும். ஜி.பி.எல் போன்று அல்லாது உரிமையாளர்கள் கிரிக்கெட் சங்கம் நிர்ணயிக்கும் தொகைக்குட்பட்டே வீரர்களை ஏலத்தில் கொள்வனவு செய்ய வேண்டும். ஏலத்தொகை வீரர்களிற்கு வழங்கப்படமாட்டாது.
ஏலத்தில் பங்கெடுக்க விரும்பும் வீரர்கள் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட 25 கழகங்களினூடாக மட்டுமே தமது விண்ணப்பத்தினை முன்வைக்கலாம்.
ஒரு அணிக்கு 15 வீரர்களை மட்டுமே ஏலத்தில் கொள்வனவு செய்யலாம். ஒரு கழகத்திலிருந்து 05 வீரர்களை தெரிவு செய்யலாம். ஆனால் 04 வீரர்கள் மட்டுமே விளையாடும் பதினொருவருள் இடம்பிடிக்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் ஜி.பி.ல் போட்டித் தொடர் பிரபல்யமடைந்ததனைத் தொடர்ந்து, கடந்த வருடத்தில் கழக அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட V.T. மகாலிங்கம் பிறீமியர் லீக்கிற்கு பிரதியீடாக இந்த ஜெப்னா சுப்பர் லீக் போட்டித் தொடர் அறிமுகம் செய்யப்படுகின்றது. ஆனால், ஜி.பி.எல் போன்று ஏலத்தொகை வீரர்களிற்கு வழங்கப்படமாட்டாது என்பது இந்த சுற்றுத் தொடரில் உள்ள வேறுபாடாகும்.
அதேவேளை, வெற்றிபெறும் அணிகளுக்கான பரிசுத்தொகையினை வீரர்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் உத்தேசித்துள்ளனர்.
போட்டித் தொடரினை ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதேவேளை, வார இறுதி நாட்களில் மட்டும் போட்டிகளை நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
Photos: Jaffna Super League | Press Announcement
ThePapare.com | Kanesalingam Renusan | 08/09/2018 Editing …
இந்த தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது, யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வி.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,
“யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் மைதான உட்கட்டுமானப் பணிகள் வெகு விரைவில் நிறைவடைந்து விடும். அடுத்த ஆண்டளவில் இந்த மைதானத்தில் போட்டிகள் இடம்பெறுகின்ற போது நாம் ஏனைய மாவட்ட வீரர்களையும் உள்வாங்கி போட்டியின் தரத்தினை மேம்படுத்தலாம். மண்டைதீவில் அமையப்பெறவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் நாம் சர்வதேச வீரர்களையும் உள்வாங்கி, இத்தொடரினை ஓர் சர்வதேச தரத்திலான போட்டியாக மாற்ற முடியும். “எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “ இப்போட்டியின் தரத்தினை உயர்த்துவதில் வீரர்கள், அணி உரிமையாளர்கள், ஊடகங்களினது பங்களிப்பும், இவை அனைத்திற்கும் மேலாக மக்கள் பங்கேற்பும் அவசியம். “ என்பதனை வலியுறுத்தினார்.
யாழ் மாவட்ட கிரிக்கெட் வீரர்களை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்கும், அவர்களது திறமைகளையும், சிறப்பான பெறுதிகளையும் வெளிக்காட்டுவதற்குமான களமாக யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஜெப்னா சுப்பர் லீக்கினை அறிமுகம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு
சுற்றுப்போட்டித் தலைவர்
யாழ் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம்
0773144627
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…