முதலாவது ஜெப்னா சுப்பர் லீக் T20 தொடரின் மூன்றாவது நாள் ஆட்டங்கள் சனிக்கிழமை (19) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
குழு B இல் நிரலிடப்பட்டுள்ள கொக்குவில் ஸ்டார்ஸ், தெல்லியூர் டைடன்ஸ் அணிகள் தமது இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. குழு A இல் நிரலிடப்பட்டுள்ள ஜெப்னா பந்தேர்ஸ் மற்றும் அரியாலை வோரியர்ஸ் அணிகள் தமது முதலாவது போட்டிகளில் வெற்றியினை பதிவு செய்துள்ளன.
கொக்குவில் ஸ்டார்ஸ் எதிர் தெல்லியூர் டைடன்ஸ்
ஜெப்னா சுப்பர் லீக்கின் ஐந்தாவது போட்டியாக அமைந்திருந்த இந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், ஏற்கனவே இடம்பெற்ற இரு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் கொக்குவில் ஸ்டார்ஸ் மற்றும் தெல்லியூர் டைடன்ஸ் அணிகள் பங்கெடுத்திருந்தன.
பிளே ஓவ்ப் சுற்றுக்கு தகுதி பெற்ற வேலணை வேங்கைகள்; தெல்லியூர் டைடன்ஸிற்கு முதலாவது வெற்றி
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்டார்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுதாடுவதற்கு களம் நுழைந்த தெல்லியூர் டைடன்ஸ் அணியினர் முதல் பதினொரு ஓவர்களில் வெறுமனே 3 விக்கெட்டுக்களினை இழந்து 73 ஓட்டங்களை பெற்றிருந்தனர். துவாரகன், அஜித் மற்றும் பிரதீப் மூவரது விக்கெட்டுக்களும் அடுத்தடுத்து வீழ்த்தப்பட தெல்லியூர் தரப்பினது ஓட்ட வேகம் சடுதியாக சரிந்தது.
19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த தெல்லியூர் வீரர்கள் தீர்மானமிக்க போட்டியில் 142 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் துவாரகன் 31 ஓட்டங்களையும், துஷியந்தன் மத்திய வரிசையில் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
கொக்குவில் ஸ்டார்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் வாமணன் மற்றும் கிருஷ்ணதீபன் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
சுஜன், வினோத் பெற்றுக்கொடுத்த இருபதுகளின் துணையுடன் கொக்குவில் வீரர்கள் 77 ஓட்டங்களை பெற்றிருந்தபோதும், அணித்தலைவர் வினோத் உட்பட தெல்லியூர் வீரர்கள் 6 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.
கே.சி.சி.சி அணியின் கேதிஸுடன் இணைந்து 7 ஆவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து போட்டியை ஜொலி ஸ்டார்ஸ் அணி வீரரான வாமணன் தம்பக்கம் மாற்றினார். கேதிஸின் பவுண்டரியுடன் போட்டியில் வெற்றி பெற்ற கொக்குவில் ஸ்டார்ஸ் பிளே ஓப் (play off) சுற்றில் தமது பெயரினை பதிவு செய்தது.
துடுப்பாட்டத்தில் எட்டாவது இலக்கத்தில் நுழைந்து அதிரடி காட்டிய வாமணன் 20 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். கேதிஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றிருந்தார். தெல்லியூர் டைடன்ஸ் சார்பாக பந்துவீச்சில் கபிலன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
- ஆட்ட நாயகன் – வாமணன் (கொக்குவில் ஸ்டார்ஸ்)
போட்டி சுருக்கம்
தெல்லியூர் டைடன்ஸ் – 141 (19) – துவாரகன் 31, துஷியந்தன் 26, பிரதீப் 19, கிருஷ்ணதீபன் 2/26, வாமணன் 2/32
கொக்குவில் ஸ்டார்ஸ் – 141/7 (18.4) – வாமணன் 42, கேதீஸ் 25, சுயன் 22, கபிலன் 3/19, சுஜாந்தன் 2/32
போட்டி முடிவு – 3 விக்கெட்டுக்களால் கொக்குவில் ஸ்டார்ஸ் வெற்றி
>>போட்டியின் புகைப்படங்களை பார்வையிட<<
பொயின்ட் பிட்றோ சுப்பர் கிங்ஸ் எதிர் அரியாலை வோரியர்ஸ்
ஜெப்னா சுப்பர் லீக் தொடரில் குழு A அணிகளுக்கான முதலாவது சுற்று ஆட்டங்கள் இன்று ஆரம்பமாகியிருந்தது. வடமராட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே அணியான பொயின்ட் பிட்றோ சுப்பர் கிங்ஸ் அணியினை எதிர்த்து யாழின் நட்சத்திர வீரர்கள் பலரை உள்ளடக்கிய அரியாலை வோரியர்ஸ் அணி மோதியிருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட பொயின்ட் பிட்றோ அணியினர் 16 ஓட்டங்களுக்கு முதலிரு விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். மூன்றாவது இலக்கத்தில் களம் நுழைந்த றஜீவன் ஒரு பக்கத்தில் நிலையாகவிருக்க மறுபக்கம் விக்கெட்டுக்கள் சாய்ந்துகொண்டிருந்தது. றஜீவனால் 61 பந்துகளில் 63 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. இன்னிங்ஸின் பிற்பகுதியில் பிரசாந் மற்றும் லதுசனினது விரைவான 23 ஓட்டங்களின் உதவியுடன் சுப்பர் கிங்ஸ் அணியினர் 155 ஓட்டங்களை எட்டினர். அரியாலை சார்பில் எரிக் துஷாந் மற்றும் பிரியலக்சன் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அரியாலை வோரியர்ஸின் முதலாவது விக்கெட்டாக 30 ஓட்டங்களை பெற்றிருக்கையில் மதுசன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து துவாரக சீலன் ஆட்டமிழந்தார். எரிக் துஷாந் ஒரு முனையில் நிதானமாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் சுப்பர் கிங்ஸ் வீரர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
எனினும் இன்னிங்ஸின் பிற்பகுதியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய எரிக் துஷாந் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். பிரியலக்சன் ஆட்டமிழக்காமல் பெற்ற 25 ஓட்டங்களின் உதவியுடன் 5 பந்துகள் மீதமாக இருக்க அரியாலை வோரியர்ஸ் அணியினர் வெற்றி இலக்கை அடைந்தனர்.
- ஆட்ட நாயகன் – எரிக் துஷாந் (அரியாலை வோரியர்ஸ்)
போட்டி சுருக்கம்
பொயின்ட் பிட்றோ சுப்பர் கிங்ஸ் – 155/6 (20) – ரஜீவன் 63*, பிரசாத் 23, லதுஷன் 23, எரிக் துஷாந் 2/19, பிரியலக்சன் 2/40
அரியாலை வோரியர்ஸ் – 156/7 (19.1) – எரிக் துஷாந் 41, துவாரக சீலன் 29, பிரியலக்சன் 25
போட்டி முடிவு – 3 விக்கெட்டுக்களால் அரியாலை வோரியர்ஸ் வெற்றி
>>போட்டியின் புகைப்படங்களை பார்வையிட<<
ஜெப்னா பந்தேர்ஸ் எதிர் நல்லூர் புறொங்கோஸ்
குழு B அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்திருந்த நாளுக்கான இறுதிப்போட்டியில் ஜெப்னா பந்தேர்ஸ், நல்லூர் புறொங்கோஸ் அணிகள் பங்கெடுத்திருந்தன.
முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட நல்லூர் புறொங்கோஸ் அணியினர் முன்வரிசையில் ஜெம்ஸினது 22 ஓட்டங்களின் பின்னர் விரைவாக விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். 16 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள் என்ற நிலையில் சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த பந்தேர்ஸின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பிரபவன் 14 பந்துகளில் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நோபேர்ட்டும் தன்பங்கிற்கு 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க நல்லூர் புறொங்கோஸ் அணியினர் 124 ஓட்டங்களை பெற்றனர்.
125 என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய பந்தேர்ஸின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் 15 ஓட்டங்களுக்குள் பிரபவன் ஆட்டமிழப்பு செய்தார். மூன்றாவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் அருண்குமார் மற்றும் மோகன்ராஜ் ஜோடி 88 ஓட்டங்களை பகிர ஜெப்னா பந்தேர்ஸ் அணி முதலாவது வெற்றியை உறுதி செய்தது. டர்வின் 13 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து போட்டியை நிறைவு செய்தார்.
ஜெப்னா பந்தேர்ஸ் சார்பில் அதிரடியாக துடுப்பாடிய மோகன்ராஜ் 7 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 30 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். அருண்ராஜ் தன் பங்கிற்கு 33 ஓட்டங்களை சேகரித்திருந்தார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்
- ஆட்ட நாயகன் – மோகன்ராஜ் (ஜெப்னா பந்தேர்ஸ்)
போட்டி சுருக்கம்
நல்லூர் புறொங்கோஸ் – 124 (20) – பிரபவன் 31, ஜேம்ஸ் 22, பிரியலக்சன் 15, டர்வின் 2/7
ஜெப்னா பந்தேர்ஸ் – 128/2 (16.2) – மோகன்ராஜ் 56, அருண்ராஜ் 33, பிரபவன் 2/31
போட்டி முடிவு – 6 விக்கெட்டுக்களால் ஜெப்னா பந்தேர்ஸ் வெற்றி
குழு B இல் ஒரு போட்டி மாத்திரம் மீதமிருக்கையில் கொக்குவில் ஸ்டார்ஸ், வேலணை வேங்கைகள் இரு அணியினரும் பிளே ஓப் சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை, வேலணை வேங்கைகள் ஏற்கனவே பிளே ஓவ் வாய்ப்பினை பறிகொடுத்திருக்கும் பண்ணை ரில்கோ கிறேடியேற்றேர்ஸ் அணியை வெற்றிபெறும் பட்சத்தில் நேரடியாக முதலாவது தகுதிப்போட்டிக்கான (Qualifier -1) வாய்ப்பினை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<