2018ஆம் ஆண்டானது அதிக உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களை கொண்டதாக அமையவுள்ளதால் இலங்கையின் சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சி வீர வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தரும் விதமாக அமையவுள்ளது. இதில் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்கள் அடுத்த வருடத்தில் பல சர்வேதச தொடர்களில் பங்கேற்கவுள்ளனர்.
மிதுன்ராஜின் புதிய போட்டி சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 5 பதக்கங்கள்
அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை..
இந்நிலையில், குறித்த போட்டித் தொடர்களை முன்னிட்டு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் 27 பேர் கொண்ட தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதில் 17 வீரர்களும், 10 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ள அதேநேரம், மைதான நிகழ்ச்சிகளுக்காக 3 வீரர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இவ்வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சன் 4.45 மீற்றர் உயரம் தாவி பாடசாலை வர்ண சாதனையுடன் தொடர்ச்சியாக 4ஆவது வருடமாகவும் தங்கப் பதக்கத்தை வென்று புதிய மைல்கல்லை எட்டினார். அதற்கு முன்னதாக கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிலும் அவர் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில், பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்ற நெப்தலி ஜொய்சன், ஆரம்ப காலத்தில் சுபாஸ்கரன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்வரன் மற்றும் பிரதீப் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்றுவந்த அவர், 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை பங்குபற்றிய பாடசாலை மட்டப் போட்டிகளில் 7 தேசிய சாதனைகளுடன் 10 தங்கப் பதக்கங்களையும் வென்று கோலூன்றிப் பாய்தலில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வீரராகவும் இடம்பெற்றிருந்தார்.
FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக்..
இந்நிலையில் தற்பொழுது இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 27 பேர் கொண்ட கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2ஆவது தடவையாகவும் நெப்தலி ஜொய்சன் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக கடந்த வருடமும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமிலும் இடம்பெற்றிருந்த நெப்தலி, அவ்வருடம் இந்தியாவில் நடைபெறவிருந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டமையினால் அவரால் சர்வதேச போட்டியொன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இதன்படி, அடுத்த வருடம் மே மாதம் இலங்கையில் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரினை நடாத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இப்போட்டிகள் தற்போது மீள்நிர்மானிக்கப்பட்டு வருகின்ற சுகததாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனவே, குறித்த போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற்றால் நெப்தலி ஜொய்சனுக்கு சொந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களுக்கு முன்னால் இலங்கைக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய அரிய வாய்ப்பும் கிட்டவுள்ளது.
இத்தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு அடுத்த வருடம் ஜூன் மாதம் ஜப்பானின் கிபு நகரில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் விளையாட்டுத் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் கிட்டவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவில் அடுத்த வருடம் ஒக்டோபரில் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டியாகவும் இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நெப்தலி ஜொய்சன் ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய விஷேட செவ்வியில் கருத்து வெளியிடும்போது, ”தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாமில் 2ஆவது தடவையாகவும் இடம்பெறக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான எனது பயிற்சியாளருக்கும், பாடசாலைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்று வருகின்ற நெப்தலி ஜொய்சன், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட sமெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு இலங்கைக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாம் (2017 ஒக்டோபர் 25ஆம் திகதி முதல்)
போட்டி | வீரர்கள் | வீராங்கனைகள் |
4 x 100 | ஆசிரி விஜேசேகர
டி.எம் சுராஜ் தினுஷ்க பி.டி சானுக சந்தீப சி.ஏ யோதசிங்க யொஹான் தனுஷ்க சில்வா |
அமாஷா டி சில்வா
தாரகா திவ்யாங்கனி இவன்தி இமாஷிகா ஷெலின்தா ஜன்சென் டி.எம்.எம்.பி வீரசூரிய |
100 மீற்றர் | – | அமாஷா டி சில்வா |
200 மீற்றர் | அருண தர்ஷன
சாலித சந்தூஷ் |
அமாஷா டி சில்வா |
400 மீற்றர் | அருண தர்ஷன
பி.எம்.பி.எல் கொடிகார |
டி.எஸ் குமாரசிங்க |
800 மீற்றர் | பசிந்து மிஹிரங்க
எம்.எஸ் கருணாரத்ன இசுரு லக்ஷான் பூர்ண சந்தமித் |
டி.எஸ் குமாரசிங்க |
100 மீற்றர் தடைதாண்டல் | ஷெஹான் காரியவசம் | |
4 x 400 | பி.எல் கொடிகார
பசிந்து மிஹிரங்க பபசரா நிகு |
தாரகா திவ்யாங்கனி
எஸ்.சி.பி பண்டார காவிந்யா தத்சரனி ரொமேஷி இஷாரா |
400 மீற்றர் தடைதாண்டல் | காவிந்யா தத்சரனி | |
உயரம் பாய்தல் | தரிந்து தசுன் | |
கோலூன்றிப் பாய்தல் | நெப்தலி ஜொய்சன் | |
நீளம் பாய்தல் | ஆர்.என் அபேரத்ன |
>> பல வீடியோக்களைப் பார்வையிட <<