அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் ஐந்து அணிகளில் ஒன்றான ஜப்னா ஸ்டாலியன்ஸ் முதலாவது அணியாக போட்டிகள் நடைபெறும் ஹம்பாந்தோட்டையை நேற்று (16) சென்றடைந்தது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் இம்மாதம் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
ஐந்து அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் இலங்கையை வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்குபற்றும் ஐந்து அணிகளில் முதலாவது அணியாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முழுவீச்சிலான பயிற்சிகளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்தது.
ஜப்னா அணியின் பயிற்சியாளர் திலின கண்டம்பி, அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் அந்த அணி வீரர்கள் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மூன்று தினங்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்த பயிற்சி முகாமில் திசர பேரேரா, வனிந்து ஹசரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சுரங்க லக்மால், பினுர பெர்னாண்டோ, சரித் அசலங்க, நுவனிது பெர்னாண்டோ உள்ளிட்ட தேசிய அணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அதேநேரம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகரட்னம் கபில்ராஜ், தெய்வேந்திரன் டினோஷன், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய மூவரும் இதன்போது பயிற்சிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கண்டியில் மூன்று நாள் பயிற்சி முகாமை நிறைவு செய்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர், ஹம்பாந்தோட்டையில் அணிகள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டலை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சென்றடைந்தனர்.
Training camp successfully completed ✅
Now Stallions guys reached to Hotel in Hambantota ? for quarantine ? #LPLT20 #LPL2020 #LPL @jaffnalpl @LPLt20official @PereraThisara @Wanindu49 @dds75official pic.twitter.com/UCfF87Pg1f
— Lanka Premier League (@LPLt20official) November 16, 2020
இதேவேளை, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் அடுத்த சில தினங்களில் ஹம்பாந்தோட்டையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் பங்குபற்றுவதில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் தமது அணி வீர்கள் இருப்பதாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
>> ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணையும் இங்கிலாந்து, தென்னாபிரிக்க வீரர்கள்!
இதுஇவ்வாறிருக்க, பல்லேகலையில் பயற்சிகளில் ஈடுபட்ட ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் போட்டிகள் நடைபெறும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் தமது பயிற்சிகளை மிக விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கின்ற பல கிரிக்கெட் ஆர்வலர்கள் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்களாக செயற்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<