கொழும்பு YMCA இன் அனுசரனையில் யாழ்ப்பாணம் YMCA, யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்துடன் இணைந்து பாடசாலை அணிகளுக்கு இடையிலான 3×3 கூடைப்பந்தாட்டத் தொடரினை ஏற்பாடு செய்திருந்தது. போட்டிகள் நேற்று முன்தினம்(19) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி நேற்றைய தினம் முழு நாளும் போட்டி யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றிருந்தது.
போட்டியானது ஆண், பெண் என இரு பாலாரிற்கும் 16 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 20 வயதிற்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது.
16 வயதிற்கு உட்பட்டோர் – ஆண்கள்
இறுதிப்போட்டி
அரையிறுதிப் போட்டியில் லீக் சுற்றில் குழு B இல் இரண்டாம் இடம்பிடித்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-B அணியை எதிர்த்து மோதிய குழு A இன் சம்பியன்களான ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-A அணி 07:01 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது.
மறுபுறம் குழு B இன் சம்பியன்களான கொக்குவில் இந்துக் கல்லூரியை 06:10 என வெற்றிபெற்று குழு A இல் இரண்டாம் இடம்பிடித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது
போட்டியின் முதல்நாள் புகைப்படங்களைப் பார்வையிட
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 07:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியையை வெற்றிபெற்று கிண்ணத்தைத் தமதாக்கியது ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-A அணி.
மூன்றாம் இடத்திற்கான போட்டி
ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-B அணி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியில் 06:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினைத் தமதாக்கியது கொக்குவில் இந்துக் கல்லூரி.
20 வயதிற்கு உட்பட்டோர் – ஆண்கள்
இறுதிப்போட்டி
முதலாவது அரையிறுதிப்போட்டியில் குழு A இன் சம்பியன்களான யாழ் மத்திய கல்லூரி-A அணியினர், குழு B இல் இரண்டாம் இடம்பிடித்த மல்லாவி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மோதியது. விரைவாக ஆடிய யாழ் மத்திய கல்லூரி- A போட்டி நேரம் பூர்த்தியாக முன்னரே 21 புள்ளிகளையும் பெற்று 21:11 என வெற்றிபெற்றது.
மறுமுனையில், குழு B இன் சம்பியன்களான யாழ் மத்திய கல்லூரி-B அணியை 12:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தியது குழு A இல் இரண்டாம் இடம்பிடித்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி.
லீக் சுற்றில் எஞ்சல் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி- A அணிக்கு ஆரம்பம் சாதகமாக அமையவில்லை, விரைவாகப் புள்ளிகளை சேகரித்த ஏஞ்சல் அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகித்து. பலத்த போராட்டத்தினை வெளிப்படுத்திய மத்திய கல்லூரி, பல ஃப்ரீ சூட்களை வீணடித்த போதும் விரைவாக புள்ளிகளைச் சேகரித்து போட்டியின் இறுதி நொடியில் 17:17 என புள்ளிகளை சமன் செய்தது.
அடுத்தடுத்து இரு புள்ளிகளைப்பெறும் அணிக்கு வெற்றி என்ற அடிப்படையில் இரு அணிகளும் களமாடின. சில நொடிகளிலேயே ஏஞ்சல் அணிக்கு ஃப்ரீ சூட் கிடைக்கப்பெற அவை இரண்டினையும் சஞ்சிகன் புள்ளிகளாக மாற்ற வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கியது ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை அணி.
மூன்றாம் இடத்திற்கான போட்டி
யாழ் மத்திய கல்லூரி-B அணி, மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணி 14:09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினைத் தம்வசப்படுத்தியது.
16 வயதிற்கு உட்பட்டோர் – பெண்கள்
இறுதிப்போட்டி
லீக் சுற்றில் முதலாம் இடம்பிடித்த உடுவில் மகளிர் கல்லூரி அணி யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியுடனான அரையிறுதியில் வோக் ஓவர் (Walk over) மூலம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.
மற்றைய அரையிறுதியில் திருக்குடும்பக் கன்னியர் மட அணியினை துவம்சம் செய்த வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணி 15:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
போட்டியின் ஆரம்பத்திலிருந்து அசத்திய வேம்படியின் அனோசிகா விரைந்து புள்ளிகளைச் சேகரிக்க, ஆட்டநேர நிறைவில் 06:01 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டி நிறைவடைய, 05 புள்ளிகள் முன்னிலையிலிருந்த வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணி இலகு வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தினைத் தமதாக்கியது.
மூன்றாம் இடத்திற்கான போட்டி
வோக் ஓவர் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியை வெற்றிபெற்ற திருக்குடும்ப கன்னியர் மட அணி மூன்றம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
20 வயதிற்கு உட்பட்டோர் – பெண்கள்
இறுதிப்போட்டி
குழு நிலைப்போட்டியில் முதலாம் இடம்பிடித்த கொக்குவில் இந்துக் கல்லூரி அணி நான்கம் இடம்பிடித்த வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணியை 10:00 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை 13:11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற திருக்குடும்ப கன்னியர் மட அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்திருந்தது.
பலம்பொருந்திய கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கு பலத்த அழுத்தத்தினை கொடுத்திருந்தனர் திருக்குடும்ப கன்னியர் மட அணியினர். கன்னியர் மட அணிக்கு எப்ஷிபா புள்ளிகளை விரைந்து சேர்க்க, கொக்குவில் இந்துவின் புள்ளிப்பட்டியலை தர்ஷி உயர்த்தினார்.
திருக்குடும்ப கன்னியர் மட அணியின் பலத்த சவாலையும் தாண்டி இறுதியில் 11:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தை தமதாக்கியது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி.
மூன்றாம் இடத்திற்கான போட்டி
உடுவில் மகளிர் கல்லூரி அணியினை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணி மோதியிருந்தது. இப்போட்டி 5:7 என்ற புள்ளிகள் கணக்கில் நிறைவிற்கு வர, 2 புள்ளிகள் முன்னிலையிலிருந்த வேம்படி மகளிர் கல்லூரி அணி மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டது.