இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், காற்பந்தாட்ட கிண்ணத்தை மீண்டும் ஒரு முறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கைப்பற்றியது. செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினுடனான இறுதிப் போட்டியில் 1-0 என வெற்றிபெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சாம்பியனானது.
காற்பந்தாட்ட குழு மட்டத்திலான போட்டிகள் பல சுவாரஸ்யங்களுக்குப் பின்னர் முடிவுபெற்றது.
குழு A இல் முன்னால் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியனான சபரகமுவ பல்கலைக்கழகம் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினுடனான போட்டியில் தோல்வியுற்றதன் பின்னர் சிறிது தடுமாற்றத்திற்கு உள்ளானது. எனினும் இரு அணிகளும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகதினுடனான போட்டியை வென்றதன் மூலம் அடுத்த சுற்றிற்குத் தெரிவாகின.
குழு B இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது ஆதிக்கம் செலுத்தி இலகுவாக அடுத்த சுற்றிற்கு நுழைந்தது.பேராதனை பலக்லைக்கழகம் மற்றும் ருஹுனு பல்கலைக்கழகம் ஆகியவற்றை முறையே 4-0 மற்றும் 3-0 என்று வெற்றிகொண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆதிக்கம் செலுத்தியது. ருஹுனு பல்கலைக்கழகதினுடனான போட்டியை 1-0 என வென்றதன் மூலமாக அடுத்த சுற்றிற்குத் தெரிவானது.
குழு C இல் போட்டிகளை நடாத்தும் வயம்ப பல்கலைக்கழகமானது கிழக்கு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களுடன் தோல்வியுற்றதன் பின்னர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழகம் முதல் இடத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 2ஆவது இடத்தையும் பிடித்துக்கொண்டன.
4 அணிகளைக் கொண்ட குழு D இல் அணிகளுக்கிடையே கடினமான போட்டி காணப்பட்டது. கொழும்பு பல்கலைக்கழகம் ஆனது களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களை கடினமான போட்டிக்குப் பின்னர் பெனால்டி மூலம் வெற்றிகொண்டதோடு மொரட்டுவ பல்கலைக்கழகத்தை 1-0 என்று வென்று குழுவில் 1ஆம் இடத்தைப் பிடித்தது. மொரட்டுவ பல்கலைக்கழகமானது ரஜரட்ட மற்றும் களனி பல்கலைக்கழகங்களை முறையே 5-0 மற்றும் 2-1 என்று வென்றதன் மூலம் 2ஆம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றிற்குத் தெரிவானது.
காலிறுதிப் போட்டிகளில் முதலாவது காலிறுதிப் போட்டியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமானது, சபரகமுவ பல்கலைக்கழகதினுடனான போட்டியை 1-1 என்று சமநிலை செய்த பின்னர் பெனால்டியின் மூலம் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முதலில் நுழைந்தது. 2ஆவது காலிறுதியில் கடினமான போட்டியின் பின்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகத்தை 2-0 என வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. யாழ்ப்பாண அணி மொரட்டுவ அணியை மீண்டும் ஒரு முறை காலிறுதியில் 2-0 என வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பேராதனை பல்கலைக்கழகதை வென்றதன் மூலம் கொழும்பு பல்கலைக்கழகம் இறுதியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டிகளில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோல் மழை பெய்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகம் மோதிக்கொண்ட இப்போட்டியில் 5-2 என யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வெற்றிபெற்று தமது பலத்தை நிரூபித்தது. அடுத்த முனையில் 2ஆவது அரையிறுதி ஆட்டம் பெனால்டி உதையின் பின்னரே நிறைவு கண்டது. ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டி 0-0 என்று சமநிலை அடைந்ததன் பின்னர் பெனல்டியில் வென்றதன் மூலம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில் 2013ஆம் ஆண்டில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தை 4-1 என்று வென்று கிண்ணத்தை சுவீகரித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இந்த இறுதிப் போட்டியிலும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை 1-0 என்று வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.
தென் கிழக்கு பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகத்தை 1-0 என்று வென்றதன் மூலம் 3ஆம் இடத்தைக் கைப்பற்றியது.
3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டிகளில் இம்முறை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் சாம்பியனானதோடு, முதன் முதலாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்