ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி சிவகுருநாதன் கிண்ணத்தை வென்ற யாழ் இந்து

191

கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிவகுருநாதன் நினைவுக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தை தமதாக்கினர். 

வருடாந்தம் இடம்பெறும் இந்த போட்டியின் இவ்வருட மோதல் கடந்த சனிக்கிழமை (14) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. மைதானத்தின் ஈரத்தன்மையின் காரணமாக இருபது ஓவர்களிற்கு மட்டுப்பட்டிருந்த இந்த போட்டியில் ஆனந்தா கல்லூரியினை வெற்றிபெற்ற யாழ் இந்து வீரர்கள் கிண்ணத்தினை மீட்டெடுத்துள்ளனர்

Photos: Inaugural Arjuna Ranatunga Challenge Trophy-2019

அதேவேளையில், இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்களிடையே முதல் முறையாக இடம்பெற்ற  அர்ஜுன ரனதுங்க சவால்கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவேதுமின்றி நிறைவிற்கு வந்திருந்தது.  

சிவகுருநாதன் நினைவுக் கிண்ண போட்டி 

இதன் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய ஆனந்தா கல்லூரியினர் முதலாவது ஓவரிலேயே ஆரம்ப விக்கெட்டினை பறிகொடுத்தனர். தொடர்ந்தும் விக்கெட்டுகளை பறிகொடுத்த கொழும்பு வீரர்கள் 11 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினர். 

இந்த நிலையில் களமிறங்கிய றொமித் சத்நிது தனியொருவராகப் போராடி ஆட்டமிழாக்காது 44 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து, தனது அணியை 20 ஓவர்களில் 79 என்ற போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி அழைத்துச்சென்றார்

யாழ் வீரர்களின் அபாரப் பந்துவீச்சு காரணமாக ஏனைய வீரர்கள் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு வேகமாக ஆட்டமிழந்து சென்றனர். 

தொடர்ந்து, பதிலிற்கு துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய இந்துக் கல்லூரிக்கு முதலாவது விக்கெட்டிற்காக 36 ஓட்டங்களினை சேகரித்தனர் கஜநாத், யோகீசன் இணை.   

பின்னர், ஆனந்தா கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை வீழ்த்தியபோதும் மத்திய வரிசையில் கோமைந்தன் பெற்றுக்கொடுத்த விரைவான 14 ஓட்டங்களினது உதவியுடன் இந்துக் கல்லூரி வீரர்கள் 17.3 ஓவர்களில் 6 விக்கெடுக்களை இழந்து வெற்றியிலக்கினை அடைந்தனர்.  

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 ……

போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளை ஆனந்தா கல்லூரியின் றொமித் சத்நிதுவும், சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதினை திசுக ஷெஹாஸும் தமதாக்கினர். யாழ் இந்துவின் கோமைந்தன் சிறந்த சகலதுறை வீரருக்கான விருதினையும், தனுஸ்ரன் சிறந்த களத்தடுப்பாட்ட வீரர் விருதினையும் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்தா கல்லூரி 79/5 (20) – றொமித் சத்நிது 44, டுலேன் 11, பிரியந்தன் 2/13 

இந்துக் கல்லூரி 80/6 (17.3) – யோகீசன் 16, கஜநாத் 14, கோமைந்தன் 14,  திசுக ஷெஹாஸ் 2/12  

போட்டி முடிவு – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி 

அர்ஜுன ரணதுங்க சவால் கிண்ணம்

உலகக் கோப்பையை இலங்கைக்கு வென்று கொடுத்த கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கவின் பெயரில் இடம்பெறும்  அர்ஜுன ரணதுங்க சவால் கிண்ணத்திற்கான அங்குரார்ப்பண  போட்டி இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்களுக்கு இடையிலான போட்டியாக இடம்பெற்றது. 

அர்ஜுன ரணதுங்க சவால் கிண்ண வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும்போது

அர்ஜுன ரணதுங்கவின் முன்னிலையில் ஆரம்பமான குறித்த போட்டியில் இலங்கை தேசிய அணி வீரர் சஜித்திர சேனநாயக்க தலைமையில் ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் அணியும், சிவராஜா தலைமையில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் அணியும் களமிறங்கியிருந்தன.

Photos : Sri Lanka vs Bangladesh | U19 Asia Cup 2019

ஆனந்தா கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களத்திற்கு வந்த சஜித்திர சேனநாயக்க சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சிக்ஸர்  மழை பொழிந்தார். இவர் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி உள்ளடங்கலாக 44 ஓட்டங்களினை பெற்றிருக்கையில் வாமணனின் பந்துவீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து சனோதித்தவின் 21 ஓட்டங்கள் மற்றும் மற்றொரு முன்னாள் தேசிய அணி வீரர் சன்ஜீவ ரணதுங்கவின் 21 ஓட்டங்களின் உதவியுடன் கொழும்பு தரப்பினர் 114 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்

அதனைத் தொடர்ந்து, 4 ஓவர்களில் இந்துக் கல்லூரி 33 ஓட்டங்களினை பெற்றிருக்கையில் வெளிச்சமின்மை காரணமாக போட்டி முடிவேதுமின்றி நிறைவிற்கு வந்தது

போட்டியின் சுருக்கம்

ஆனந்தா கல்லூரி – 114/6 (10) சஜித்திர 44, சனோதித்த 21, சன்ஜீவ 15, கிருஷோபன் 2/26

இந்துக் கல்லூரி – 33/3 (04) கல்கோகன் 25 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<