கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரிக்கும் இடையிலான இரண்டு நாட்களை கொண்ட இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கட் போட்டியில், சமபலத்துடன் மோதிக்கொண்ட இரு அணிகளினதும் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
பம்பலபிட்டிய, இந்து கல்லூரி மைதானத்தில் இரண்டாவதும் இறுதியுமான நாளாக நடைபெற்ற, இந்த போட்டி விறுவிறுப்பாகவும் அதேநேரம் துடுப்பாட்டம் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகிய துறைகளில் பல்வேறான திறமைகளை வெளிப்படுத்தியிருந்த போட்டியாகவும் அமைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன் குறித்த போட்டியில் இரு அணிகளினதும் வீரர்களும் பல்வேறான திறமைகளை வெளிப்படுத்தி போட்டியின் போக்கை பல சந்தர்ப்பங்களில் மாற்றிய அதேவேளை தமது முழுமையான பங்களிப்பினை தத்தமது அணிகளுக்கு வெற்றியீட்டும் நோக்கில் வழங்கியிருந்தனர்.
போட்டியின் முதல் நாள், நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய யாழ் இந்து கல்லூரி முதலில் கொழும்பு இந்து கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்திருந்தது. அந்த வகையில் களமிறங்கியிருந்த கொழும்பு இந்து கல்லூரி எஸ். மதுர்ஷன் மற்றும் யூதீஷனின் சிறப்பாட்டதின் காரணமாக 287 ஓட்டங்களை எட்டியிருந்தது.
அதிகபட்ச ஓட்டங்களாக எஸ். மதுர்ஷன் 72 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார். ஒரு கட்டத்தில் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஐந்தாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கஜேந்திரனுடன் 65 ஓட்டங்களையும், யூதீஷனுடன் இணைந்து 64 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்டங்களை 180 ஆக உயர்த்தியிருந்தார். அதேநேரம் வை. விதுஷன், எல். சிவலக்சன், என். அபிப்ரியன் மற்றும் கே. நிக்கேஷ் தங்களுக்கிடையே தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.
அதனையடுத்து களமிறங்கிய யாழ் இந்து கல்லூரி சார்பாக கே. சந்தோஷ் மற்றும் வை. வீதுசன் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி முதல் விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்த்து கொண்ட அதேவேளை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தனர். அதேநேரம் கஜேந்திரனின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 172 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய அணித் தலைவர் 9ஆவது விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட அதேவேளை இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 53 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்டு 63 ஓட்டங்களை விளாசி அணியை மீட்டெடுத்தார்.
ஒரு கட்டத்தில் 167 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலிருந்த யாழ் அணியை கொழும்பு இந்து கல்லூரியின் கஜேந்திரன் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்ககுக்கு வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். அத்துடன் குறித்த இன்னிங்சில் மொத்தமாக 81 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி யாழ் அணியை 279 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தார்.
முதல் இன்னிங்சில் 54 ஓவர்களுக்குள் 287 ஓட்டங்களை குவித்திருந்த கொழும்பு இந்து கல்லூரி, இரண்டாவது இன்னிங்சில் 55 ஓவர்களுக்கு 229 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட அதேநேரம் சற்று மந்தமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. குறித்த இன்னிங்சில் அதிகபட்ச ஓட்டங்களாக எஸ். செரோன் மற்றும் ஷேவாக் முறையே 50, 63 ஓட்டங்களை பதிவு செய்தனர். அதேநேரம் பந்து வீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய என். அபிப்ரியன் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் எல். சிவலக்சன் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
அந்தவகையில், குறித்த இறுதி நாளில் 20 ஓவர்கள் மாத்திரமே எஞ்சிய நிலையில், யாழ் இந்து கல்லூரிக்கு 238 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களை குவிக்க முற்பட்டதால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே. சந்தோஷ் வெறும் ஒரு ஓட்டத்துக்கு யுதீஷனின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும் மறுமுனையில் துடுப்பாடிக்கொண்டிருந்த வை. விதுசன் 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய எம். துவரன் சிக்ஸர் மழை பொழிந்தார். இரண்டு நாள் கொண்ட போட்டி டி20 போட்டியாக காட்சியளித்தது. 26 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 44 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை துரதிஷ்டவசமாக எஸ். செரோனின் பந்து வீச்சில் சேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதி வரை அதிரடி காட்டிய யாழ் இந்துக் கல்லூரிக்கு ஆட்ட நேர நிறைவின் போது 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. சிறப்பாக பந்து வீசிய யுதீஷன் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அந்தவகையில் இந்த போட்டியில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை இனம் கண்டுக்கொள்ள கூடிய போட்டியாக இவ்வீரர்கள் எதிர்காலத்தில் மேலும் தமது திறமைகளை மேம்படுத்தி தேசிய ரீதியில் பிரகாசிக்க papare.com சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
போட்டியின் இறுதியில் பங்கு கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவரவிக்கப்பட்டார்கள். அத்துடன் போட்டியின் போது வெளிப்படுத்தியிருந்த நேர்த்தி மற்றும் விளையாட்டின் மேல் கொண்டிருந்த பற்றுதல் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இலங்கை கிரிக்கெட் சபையினால் கிரிக்கெட் விளையாட்டு உபகரணகள் அடங்கிய இரண்டு கிரிக்கெட் பொதிகள் அன்பாளிப்பாக வழங்கப்பட்டன.
போட்டி சமநிலையில் முடிவுற்றதால், இப்போட்டிக்கான வெற்றி கிண்ணத்தை யாழ் இந்து கல்லூரி அதிபர் திரு. ஐ. தாயானந்தராஜா மற்றும் கொழும்பு இந்து கல்லூரி அதிபர் டி.பி. பரமேஸ்வரன் ஆகியோர் தமது கரங்களினால் இரு அணிகளினதும் தலைவர்களுக்கு கையளித்தனர்.
விருதுகள்
- சிறந்த துடுப்பாட்ட வீரர் : வை. வீதுசன் (யாழ் இந்து கல்லூரி)
- சிறந்த பந்து வீச்சாளர் : கஜேந்திரன் (கொழும்பு, இந்து கல்லூரி)
- சிறந்த களத் தடுப்பாளர் : மதுசான் (கொழும்பு, இந்து கல்லூரி)
- போட்டியின் சிறப்பாட்டக்காரர் : யுதீஷன் (கொழும்பு, இந்து கல்லூரி)
போட்டியின் சுருக்கம்
இந்து கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) : 287 (54 ஓவர்கள்) -எஸ். மதுர்ஷன் 72, கஜேந்திரன் 35, யூதீஷன் 63, ஹரிஹரன் 43, வை. விதுஷன்26/2, எல். சிவலக்சன் 110/2, என். அபிப்ரியன் 60/2, கே. நிக்கேஷ் 6/2, எஸ். அச்சிகன் 27/1, எம். துவரன் 23/1
இந்து கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) : 279 (53.5 ஓவர்கள்) – கஜநாத் 63, கே. சந்தோஷ் 39, வை. வீதுசன் 52, எம். துவரன் 51, எல். சிவலக்சன் 38, எஸ். ஷரோன் 52/1, கஜேந்திரன் 81/8, மதுசான் 39/1
இந்து கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்) : 229 (55 ஓவர்கள்) – எஸ். செரோன் 50, ஷேவாக் 63, யுதீஷன் 33, பி. குமார் 28, என். அபிப்ரியன் 39/4, எல். சிவலக்சன் 32/3
இந்து கல்லூரி, யாழ்ப்பாணம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 124/5(20 ஓவர்கள்) – வை. வீதுசன் 40, எம். துவரன் 44, கே. நிக்கேஷ் 23, யுதீஷன் 43/2, எஸ். செரோன் 1/1