யாழ். ஹார்ட்லி மாணவன் பிரகாஷ்ராஜ் சம்மெட்டி எறிதலில் புதிய சாதனை

1464

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளான இன்று (26) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மெட்டி எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் சிவகுமார் பிரகாஷ்ராஜ் புதிய போட்டி சாதனை படைத்தார்.  

இதேநேரம், குறித்த போட்டியில் கலந்துகொண்ட அதே கல்லூரியின் மாணவர்கள் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தேசிய மட்டத்தில் அதிவேக வீரராக மகுடம் சூடிய மொஹமட் சபான்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் …….

இன்று காலை நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்ப சுற்றுக்களில் ஹார்ட்லி வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்படி, 39.73 மீற்றர் தூரத்தை எறிந்து சிவகுமார் பிகாஷ்ராஜ் போட்டிக்கான புதிய சாதனை நிலைநாட்டினார்.

அநுராதபுரம் மெய்வல்லுனர் சங்கத்தைச் சேர்ந்த டபிள்யு. எம் நியோமல் 2016இல் 34.10 மீற்றர் தூரம் எறிந்து முன்னைய சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார். இந்த சாதனையை பிரகாஷ்ராஜ் இன்று மேலதிக 5 மீற்றரால் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பங்குபற்றி வருகின்ற பிரகாஷ்ராஜ், குறித்த வருடத்தில் தட்டெறிதலில் 7ஆவது இடத்துடன் வர்ண சாதனையும், 2016இல் நடைபெற்ற சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் 3ஆவது இடத்தையும் வென்றார். அத்துடன் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 6ஆவது இடத்தைப் பெற்று வர்ண சாதனையும் படைத்தார்.

இதனையடுத்து கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் சம்மெட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனிஷ்ட மெய்வல்லுனரில் தொடர்ந்து முறியடிக்கப்படும் போட்டி சாதனைகள்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித்……….

அத்துடன் சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், அதனைத்தொடர்ந்து அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இறுதியாக கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களாக சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், குறித்த போட்டியில் 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்திருந்தார்.  

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு தகுதிபெற்ற முதல் வட மாகாண வீரராகம் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதேநேரம், பிரகாஷ்ராஜ் பங்குபற்றிய போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி வீரர்களான வி. யதார்த்தன், முன்னைய போட்டி சாதனையை (34.10 மீற்றர்) சமப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்ட தட்டெறிதலில் பங்குபற்றி, இம்முறை 20 வயதுக்குட்பட்ட சம்மெட்டி எறிதலில் முதற்தடவையாகக் கலந்துகொண்ட டி. அபிஷாந்த், 31.56 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்நிலையில், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஹார்ட்லி கல்லூரி, ஓரு போட்டி சாதனையுடன், 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று எறிதல் போட்டிகளில் தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மெய்வல்லுனர் துறை வரலாற்றில் முதற்தடவையாக யாழ். ஹார்ட்லி கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டியொன்றில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பையும் அக் கல்லூரி மாணவன் சிவகுமார் பிரகாஷ்ராஜ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே அவருடைய வெற்றிப்பயணம் தொடருவதற்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.