தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் 4ஆவது நாள் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் அனைத்து இடங்களையும் பெற்று தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.
பாடசாலை மெய்வல்லுனரில் சதீபா, ஷெஹான் சாதனை
கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப் பிரிவு ஆகியன இணைந்து நடாத்துகின்ற 33ஆவது…
இதில் 3.10 மீற்றர் உயரம் தாவிய யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வர்ண சாதனையுடன், 2ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கம் வென்றார்.
எனினும், இப்போட்டியில் 3.20 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு ஹெரினா எடுத்த முயற்சி துரதிஷ்டவசமாக தவறவிடப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பங்குபற்றி வருகின்ற ஹெரினா, அவ்வருடம் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.49 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜோன் டார்பர்ட் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி உயரம் பாய்தல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வந்த அவர், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 2.70 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போதைய வெற்றியின் பிறகு ThePapare.com இணையத்தளத்துக்கு ஹெரினா கருத்து வெளியிடுகையில், ”நான் 2015ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பங்குபற்றி வருகின்றேன். இவ்விளையாட்டை எந்தவொரு இடையூருமின்றி மேற்கொள்வதற்கு எனது குடும்பத்தாரும், பாடசாலையும் தொடர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றமைக்கு இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்லாமல சுபாஸ்கரன் ஆசிரியர் மற்றும் எனது அக்காவான அனிதாவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் எதிர்வரும் காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று இந்நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுப்பேன்” என அவர் தெரிவித்தார்.
200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்
தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வருடத்தின்…
ஹெரினா கோலூன்றிப் பாய்தலைப் போல நேற்று முன்தினம் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியிலும் 1.58 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றதுடன், புதிய வர்ண சாதனையையும் நிகழ்த்தினார்.
இதற்கு முன்னர் இவர், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.50 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இம்முறை ஈட்டி எறிதல், கோலூன்றிப் பாய்தல் மற்றும் தட்டெறிதல் ஆகிய மைதான நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சங்கவி, ஹெரினாவுடன் போட்டியிட்டு இம்முறையும் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் குறித்த போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தை தாவி புதிய வர்ண சாதனையும் நிகழ்த்தினார்.
எனினும், முன்னதாக நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட சங்கவி, 37.44 மீற்றர் தூரத்தை எறிந்து பாடசாலை வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இராணுவ மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு மாகாண வீரர்கள் பிரகாசம்
இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி அதனை நிலைபெறச்…
2014ஆம் ஆண்டு ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் ஆகிய இரு மைதான நிகழ்ச்சிகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற சங்கவி, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் 2ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மற்றுமொரு மாணவியான என் டக்சிதா, 2.90 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்படி, அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்ற க. கனாதீபனின் வழிகாட்டலின் கீழ் சங்கவி மற்றும் டக்சிதா ஆகிய மாணவிகள் இவ்வாறு வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தனர்.
அத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.60 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல சுவையான செய்திகைளப் படிக்க