யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத் தொடரின் சம்பியனாக ஆவரங்கால் மத்தி

442

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினர் E.S.P நாகரத்தினம் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடத்திய 2017ஆம் ஆண்டுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து மத்திய விளையாட்டுக் கழக அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஆண்கள் – பிரிவு A

ஆண்களுக்கான A பிரிவில் 2016 ஆம் ஆண்டு சுற்றுத் தொடரில் B பிரிவில் சம்பியனானதன் அடிப்படையில் தரமுயர்த்தப்பட்ட உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மற்றும் திறமை அடிப்படையில் தரமுயர்த்தப்பட்டிருந்த புத்தூர் வளர்மதி, யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஆகியன உள்ளடங்கலாக 9 அணிகள் பங்குபற்றின.

இத்தொடரின் அரையிறுதியில் நடப்பு சம்பியன்களான ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழக  அணியை  3-1 என இலகுவாக வீழ்த்தி ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக  அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோன்று, மற்றைய அரையிறுதியில் ஆவரங்கால் இந்து இளைஞர், புத்தூர் கலைமதி அணிகளுக்கு குழு நிலைப்போட்டியில் அதிர்ச்சியளித்திருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக அணியை 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற புத்தூர் வளர்மதி அணியினர் A பிரிவில் தமது முதலாவது தொடரிலேயே  இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அனுபவம் வாய்ந்த மத்திய விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து A பிரிவிற்கு முதன் முறையாக தரமுயர்த்தப்பட்டிருந்த வளர்மதி அணி மோதியது.

3 தேசிய சாதனைகள், 8 போட்டிச் சாதனைகளுடன் நிறைவுற்ற தேசிய மெய்வல்லுனர் தொடர்

முதலாவது செட்டை 25:14 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி மிக இலகுவாக தமதாக்கியது. இரண்டாவது செட்டில் ஆட்டம் விறுவிறுப்படைய ஆரம்பித்தது. அந்த செட்டை 25:19 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி வளர்மதி அணி செட் கணக்கை 1:1 என சமநிலைப்படுத்தியது.

மூன்றாவது செட் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாது ஆரம்பித்திருந்த போதும் ஒரு கட்டத்தில் விரைந்து புள்ளிகளைச் சேகரித்த ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணியினர் 25:17 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி 2:1 என்ற செட் கணக்கில் தமது அணியை முன்னிலைப்படுத்தினர்.

நான்காவது செட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆவரங்கால் மத்திய அணியினர் 25:18 என்ற புள்ளிகள் கணக்கில் தம்வசப்படுத்தி 3:1 என்ற செட் கணக்கில் இலகு வெற்றியுடன் 2017 ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத் தொடரின் சம்பியன்களாக தம்மை நிலைநிறுத்தினர்.

முதலாம் இடம் – ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்

இரண்டாம் இடம் – புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகம்

சிறந்த வீரன் – சிந்துஜன் (ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்)


ஆண்கள் – பிரிவு B

இத்தொடரின் அரையிறுதியில் அச்சுவேலி கலைமகள் அணியை 3-0 என்ற செட் கணக்கில் இலகுவாக வீழ்த்தி சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மறுமுனையில் கச்சாய் வொலி கிங்ஸ் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நாயன்மார்கட்டு பாரதி  அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பலத்த ஆதரவின் மத்தியில் தமது சொந்த மைதானத்தில் களமிறங்கிய பாரதி அணியினர் 25:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் முதலாவது செட்டை இலகுவாகக் கைப்பற்றினர். அடுத்த செட்டில் பதிலடி கொடுக்கும் முகமாக களமிறங்கிய சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணியினர் ஆரம்பத்தில் விரைவாகப் புள்ளிகளைச் சேகரித்தபோதும், பாரதி அணியினர் ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் ஆதிக்கஞ் செலுத்த ஆரம்பித்தனர். விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது செட்டின் இறுதியில் 27:25 என்ற புள்ளிகள் அடிப்படையில் பாரதி அணியினர் வெற்றிபெற்றனர். தொடர்ச்சியாக மூன்றாவது செட்டையும் 25:20 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாகக் கைப்பற்றி 3:0 என்ற செட் கணக்கில் போட்டியில் வெற்றிபெற்றனர். இந்த வெற்றியின் மூலம் நாயன்மார்கட்டு பாரதி அணியினர் அடுத்த வருடம் முதல் A பிரிவிற்கு தரமுயர்த்தப்படுவார்கள்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாம் இடம் – நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக் கழகம்

இரண்டாம் இடம் – சண்டிலிப்பாய் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்

சிறந்த வீரன் – நற்குணம் (நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக் கழகம்)

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டமானது பாடாசாலை மட்டத்திலும், கழக மட்டத்திலும் ஆண்கள் அணிகள் நிறைந்து காணப்படுகின்றன. பெண்கள் பிரிவை அவதானிக்கையில் பாடசாலை மட்டத்தில் பங்கெடுக்கின்ற மற்றும் கடந்த காலங்களில் பங்கெடுத்த வீராங்கனைகள் கழக மட்ட போட்டிளில் பங்கெடுப்பதில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும். யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தொடரில் கடந்த காலங்களில் இரண்டு அணிகளேனும் பங்கெடுத்திருந்தன. இவ்வருடம் பெண்கள் பிரிவில் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் மட்டுமே பங்கெடுப்பதற்கு விண்ணப்பித்திருந்தமையினால் போட்டிகள் ஏதுமின்றி அவர்களுடைய பங்கெடுத்தலிற்கென கௌரவமளிக்கப்பட்டது.

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத் தொடரானது ஒவ்வொரு வருடமும் மிக நீண்ட கால இடைவெளிகளில் நடாத்தப்படுவது பெருங்குறையாக இருந்து வருகின்றது. ஆரம்பச் சுற்றுக்கள் நிறைவடைந்து மிக நீண்ட இடைவெளியின் பின்னரே இறுதிச் சுற்றுக்கள் இடம்பெறுகின்றது. சுற்றுத் தொடரானது குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்பது வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.