யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினது 2016/17ஆம் பருவகாலத்திற்கான அங்கத்துவ கழகங்களிடையேயான கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் ஆண்கள் பிரிவில் சென்றலைட்ஸ் அணியும் பெண்கள் பிரிவில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (K.C.C.C) அணியும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளுக்கும் இடம்பெற்றிருந்த இத்தொடரின் முதலாவது சுற்று லீக் முறையிலும் அதற்கு அடுத்த சுற்று Play off முறையிலும் இடம்பெற்றிருந்தன. இதன் இறுதிப் போட்டிகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றன.
கபில்ராஜின் 10 விக்கெட்டுகளுடன் வடக்கின் பெரும் சமரை வெற்றிகொண்டது சென் ஜோன்ஸ் கல்லூரி
இன்று இடம்பெற்று முடிந்த 111ஆவது வடக்கின் பெரும் சமரில் இன்னிங்ஸ் மற்றும் 7 ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய…
ஆண்கள் பிரிவு
ஆண்கள் பிரிவில், குழு நிலையில் முதலிடம் பெற்றிருந்த சென்றலைட்ஸ் அணி, காங்கேசன்துறை ஜக்கிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்திருந்தது. மறுபுறத்தே, K.C.C.C அணியையும், கங்கேசன்துறை அணியையும் அடுத்தடுத்து வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்திருந்தது பற்றீசியன்ஸ் அணி.
போட்டியின் முதல் காற்பகுதியில் 8:7 என முன்னிலை பெற்றது பற்றீசியன்ஸ். இரண்டாவது காற்பகுதியில் பற்றீசியன்ஸ் 15 புள்ளிகளையும், சென்றலைட்ஸ் 11 புள்ளிகளையும் சேர்த்தனர். முதல் அரைப்பகுதி 23:18 என நிறைவுக்கு வர, பற்றீசியன்ஸ் சென்றலைட்ஸை விட 5 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தனர்.
மூன்றாவது காற்பகுதியில் விரைந்தாடிய சென்றலைட்ஸ் 13 புள்ளிகளையும், பற்றீசியன்ஸ் 11 புள்ளிகளையும் சேகரித்தனர். தொடர்ந்தும் சென்றலைட்ஸை விட பற்றீசியன்ஸ் 03 புள்ளிகளால் முன்னிலை பெற்றிருந்தனர்.
இறுதிக் காற்பகுதியில் அபாரமாக ஆடிய சென்றலைட்ஸ் 15 புள்ளிகளை சேகரிக்க, பற்றீசியன்ஸால் வெறுமனே 07 புள்ளிகளையே பெற முடிந்தது. எனவே, இறுதிக் காற்பகுதியில் கிடைத்த சிறப்புப் பெறுதியுடன் 46:41 என ஆட்டத்தை நிறைவு செய்த சென்றலைட்ஸ் கிண்ணத்தை தமதாக்கியது.
விருதுகள்
சம்பியன் – சென்றலைட்ஸ் அணி
2ஆம் இடம் – பற்றீசியன்ஸ் அணி
3ஆம் இடம் – காங்கேசன்துறை அணி
ஆட்ட நாயகன் – நிறோசன் (பற்றீசியன்ஸ்)
தொடர் நாயகன் – சுஜீந்திரன் (சென்றலைட்ஸ்)
பெண்கள் பிரிவு
குழு நிலையில் முன்னிலை வகித்த K.C.C.C அணியை வீழ்த்தி சிவன் அணியும், மறுபுறத்தில் சிவனுடன் தோல்வியடைந்து காங்கேசன்துறை அணியை வீழ்திய K.C.C.C அணியும் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன.
முதற் காற்பகுதியில் அபாரமாக ஆடிய K.C.C.C அணி 15 புள்ளிகளை சேர்க்க, சிவன் 05 புள்ளிகளை மட்டுமே சேர்த்தது. இரண்டாவது காற்பகுதியில் விரைந்தாடிய சிவன் அணி 13 புள்ளிகளை சேகரித்தது. K.C.C.C அணி 04 புள்ளிகளை மட்டுமே சேகரித்தது.
சபீரின் ஹெட்ரிக் கோலினால் நேபாலை இலகுவாக வீழ்த்திய இலங்கை
தெற்காசிய மற்றும் ஜப்பான் நாடுகளின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரின் மூன்றாவது போட்டியாக…
முதல் அரைப்பகுதி நிறைவில் K.C.C.C அணி 20 புள்ளிகளையும் சிவன் அணி 18 புள்ளிகளையும் பெற்றிருந்தன. பரபரப்பாக ஆரம்பமாகிய மூன்றாவது காற்பகுதியில் சிவன் அணிக்கு 04 புள்ளிகளை மட்டும் விட்டுக்கொடுத்து, K.C.C.C அணியினர் 14 புள்ளிகளை சேகரித்து தமது முன்னிலையை உறுதி செய்தனர்.
இறுதிக் காற்பகுதியில் சிவன் 19 புள்ளிகளையும், K.C.C.C அணி 13 புள்ளிகளையும் பெற்றன. இதன் காரணமாக போட்டி நிறைவில் 47:41 என K.C.C.C அணி வெற்றி பெற்றது.
விருதுகள்
சம்பியன் – K.C.C.C அணி
2ஆம் இடம் – சிவன் அணி
3ஆம் இடம் – காங்கேசன்துறை அணி
ஆட்ட நாயகி – தமிழரசி (K.C.C.C அணி)
தொடர் நாயகி – சுபீசனா (சிவன் அணி)