இறுதி வரை போராடியும் சம்பியன் கிண்ணத்தை இழந்த யாழ். மத்திய கல்லூரி

U19 SCHOOLS CRICKET TOURNAMENT 2020/22

825

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்திய காலி வித்தியாலோக கல்லூரி தொடரின் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

எனினும், எதிரணிக்கு கடுமையான போட்டியைக் கொடுத்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வீரர்கள் தமது அணியின் வெற்றிக்காக இறுதி ஓவர் வரை போராடினர்.

யாழ் வீரர்கள் தமது அரையிறுதிப் போட்டியில் ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டும், வித்தியாலோக அணியினர் மொறட்டுவை மெதொடிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையை 4 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்ட நிலையிலும் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில், தொடரின் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி சனிக்கிழமை (04) கொழும்பு நாலந்த கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இதன் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வித்தியாலோக அணியின் தலைவர் லக்ஷான் சந்தீப முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதன்படி, லக்ஷான் மற்றும் ஷமத் நிர்மால் ஜோடி முதல் விக்கெட்டுக்காக சிறப்பாக ஆடி 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஷமத் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணி 109 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இரண்டாவது விக்கெட்டாக அணியின் தலைவர் லக்ஷான் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த முதல் இரண்டு விக்கெட்டுக்களும் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டன.

அதன் பின்னர் யாழ் மத்திய கல்லூரியின் கஜன் மற்றும் அஜேய் இருவரும் அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை பகிர்ந்துகொள்ள 117 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் காலி வீரர்கள் தமது முதல் 5 விக்கெட்டுக்களையும் இழந்து தடுமாற்றம் கண்டனர்.

எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கவிந்த மற்றும் சொனால் ஜோடி அணி 202 ஓட்டங்களைப் பெறும் வரையில் தமது விக்கெட்டுக்களை இழக்காமல் 85 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த இணைப்பாட்டத்தின் துணையுடன் வித்தியாலோக அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் கவிந்த 47 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த ஓட்ட எண்ணிக்கையானது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எதிராக ஒரு அணி இந்த தொடரில் பெற்ற அதி கூடிய ஓட்டமாகவும் பதிவாகியது.

யாழ். மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் அஜேய் 9 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, கௌதம் மற்றும் கஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

அதன் பின்னர் சவால் மிக்க 211 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அரையிறுதிப் போட்டியில் அரைச்சதம் கடந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சாரங்கன் 5 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து சென்றார்.

அதன் பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய போதும் மத்திய வரிசை வீரர்கள் வேகமாக ஓட்டங்களைப் பெற முயற்சித்தமையினால் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் 32 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்த யாழ் மத்திய கல்லூரி அணிக்கு இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் வேகமாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டமை பெரிய ஒரு அழுத்தமாக மாறியது.

எனினும், இறுதி ஓவர் வரை போராடிய அவ்வணியினர் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்று வெறும் 17 ஓட்டங்களால் தோல்வியடைந்து சம்பியன் கிண்ணத்தை தவறவிட்டனர்.

சம்பியன் அணி – வித்தியாலோக கல்லூரி

யாழ் மத்திய கல்லூரியின் துடுப்பாட்டத்தல் சிறப்பாக செயற்பட்ட சன்சயன் 88 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார். முதலில் நிதானமாக ஆடி பின்னர் அதிரடி காண்பித்த சகலதுறை வீரர் அஜேய் 73 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார்.

வித்தியாலோக கல்லூரி அணியின் பந்துவீச்சில் சசிந்து, செனித் பிரவீன் மற்றும் உமங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இந்த முடிவுடன், இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் வித்தியாலோக கல்லூரி சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொள்ள, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

போட்டியின் சுருக்கம்

வித்தியாலோக கல்லூரி 210/6(50) – கவிந்த பஸ்னாயக 53, லக்ஷான் சந்தீப 34, அஜேய் 38/2

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சன்சயன் 55, அஜேய் 45, சசிந்து 38/2, உமங்க 39/2

போட்டி முடிவு – வித்தியாலோக கல்லூரி 17 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<