இலங்கையின் பழமையான கிரிக்கெட் பெரும் போட்டிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வடக்கின் பெரும் சமர் போட்டி தற்போது சூடுபித்துள்ளது.
இவ்வருடம் இடம்பெறவுள்ள 116ஆவது வடக்கின் பெரும் சமரானது மார்ச் மாதம் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் வழமைபோன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இதுவரை இடம்பெற்றுள்ள மோதல்களின் முடிவுகளைப் பார்க்கின்றபோது, சென் ஜோன்ஸ் கல்லூரி 38 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி 28 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 41 போட்டிகள் சமநிலையடைந்துள்ள அதேவேளை, 7 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
இறுதியாக, கடந்த வருடம் இடம்பெற்ற 115ஆவது வடக்கின் பெரும் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரியினர் 99 ஓட்டங்களால் வெற்றி பெற்று, வடக்கின் பெரும் சமரில் நடப்பு சம்பியன்களாக உள்ளனர்.
- 115வது வடக்கின் பெரும் சமரை வென்றது சென். ஜோன்ஸ் கல்லூரி
- Photos: St John’s College, Jaffna Vs Jaffna Central College | 18th Limited overs Battle of the North
- Photos : St John’s College,Jaffna vs Jaffna Central College | 114th Battle of the North – Day 3
இவ்வாறான ஒரு நிலையில், இம்முறை இடம்பெறவுள்ள மோதலானது இரு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாக இடம்பெறவுள்ளது. காரணம் இரு அணிகளிலும் அனுபவம் நிறைந்த வீரர்கள் அதிகம் இருப்பதனால், நடப்புச் சம்பியன் என்ற பட்டத்தை தக்க வைக்கும் நோக்குடன் சென் ஜோன்ஸ் வீரர்களும், இழந்த கிண்ணத்தை பறித்தெடுக்கும் நோக்குடன் யாழ் மத்திய கல்லூரி வீரர்களும் இம்முறை களம் காணவுள்ளனர்.
சென் ஜோன்ஸ் கல்லூரி
இந்த வருடம் தமது கல்லூரியின் 200ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு, 116ஆவது வடக்கின் பெரும் சமர் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக அமையவுள்ளது. கல்லூரியின் சிறப்புமிக்க ஆண்டில் பெரும் போட்டியை வெற்றி கொள்ள வேண்டிய சவால் அவ்வணிக்கும், அணியை நீண்ட காலம் பயிற்றுவிக்கும் பத்மனாதன் லவேந்திராவுக்கும் உள்ளது.
பாடசாலை கிரிக்கெட்டில் பிரிவு 2 ஏ தரநிலையில் ஆடும் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2022/23 பருவகால பிரகாசிப்பை பார்க்கின்றபோது நல்ல அடைவுகளையே அவ்வணி பெற்றுள்ளது.
பலம் மிக்க அணிகளான கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி மற்றும் கரந்தெனிய மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் மாத்திரம் தோல்வி கண்ட அவ்வணியினர் இரண்டு இன்னிங்ஸ் வெற்றிகள் உட்பட நான்கு போட்டிகளில் வெற்றியையும், ஏனைய அனைத்துப் போட்டிகளையும் சமநிலையிலும் முடித்துள்ளனர்.
அவதானிக்க வேண்டியவர்கள்
அணியின் துடுப்பாட்டத்திற்கு சிறந்த ஆரம்பம் கொடுக்கும் வீரராக இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சச்சின் கணபதி இருக்கின்றார். இந்த பருவத்தில் (இரண்டு நாட்கள் கொண்ட அனைத்து போட்டிகளையும் சேர்த்து) ஒரு சதம் மூன்று அரைச் சதங்கள் உட்பட 400 இற்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்துள்ள அவர் அணியின் துடுப்பாட்டத்தில் முக்கிய ஒருவராக உள்ளார்.
அதேபோன்று, பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் சுற்றுத் தொடரில் மாத்திரம் 7 போட்டிகளில் 294 ஓட்டங்களைக் குவித்துள்ள மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சங்கீத் கிரேம் ஸ்மித் அணியின் மற்றொரு துருப்புச் சீட்டாக உள்ளார். குறித்த பிரிவுக்கான தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்களில் தேசிய மட்டத்தில் அவர் முதல் 10 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணிக்காக இந்த பருவத்தில் மொத்தம் 6 அரைச் சதங்களை கடந்துள்ள மற்றொரு சகலதுறை துடுப்பாட்ட வீரர்தான் நேசகுமார் எபனேசர். ஆரம்ப துடுப்பாட்டம், மத்திய வரிசை என எந்த இடத்திலும் களமிறங்கி சிறப்பிக்கக் கூடிய இவர் பல போட்டிகளில் அணியை சரிவில் இருந்து மீட்ட வீரராக உள்ளார்.
அதேபோன்று, இம்முறை அணியை வழிநடத்தும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சபேசன் மற்றும் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான அன்டன் அபிஷேக் ஆகியோர் தமது 14 வயது முதலே பெரும் போட்டிகளில் அணியில் இடம்பிடித்த அனுபவ வீரர்களாக உள்ளமை சென் ஜோன்ஸ் அணியின் மேலதிக பலமாக உள்ளது. இதில் 115ஆவது வடக்கின் பெரும் சமரில் இரண்டாம் இன்னிங்சில் சபேசன் சதம் கடந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தமை நினைவுகூறத்தக்கது.
Photos – St. Patrick’s College vs Jaffna College – 30th Battle of the Gold One Day encounter
இவற்றுக்கு மேலதிகமாக அவ்வணியில் பந்துவீச்சுக்கு சிறந்த பங்களிப்பு செய்பவர் சைனமன் பந்துவீச்சாளர் ஜெயசந்திரன் அஷ்னாத். கடந்த பெரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய இவரது பந்துவீச்சு மூன்று நாட்கள் கொண்ட வடக்கின் பெரும் சமரில் இம்முறையும் யாழ் மத்திக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு இந்த வருட போட்டியில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. இறுதியாக நடந்த இரண்டு மோதல்களிலும் தோல்வி கண்டுள்ள அந்த அணியின் ஒரே இலக்கு இழந்த கிண்ணத்தை இம்முறை தட்டிப் பறிப்பதாகும்.
கடந்த இரண்டு வருடங்களாக அணியை பொறுப்பெடுத்து பயிற்றுவித்து வருகின்ற இளம் பயிற்றுவிப்பாளர் குலேந்திரன் செல்ரன், வீரர்களை அவர்களின் பாணியில் ஆட சுதந்திரம் கொடுப்பவர். இதன் பலனாக, கடந்த இரண்டு வருடங்களில் பிரிவு மூன்றில் இரண்டு நாட்கள் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் சிறந்த பிரகாசிப்பை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெளிப்படுத்தி வருகின்றது.
குறிப்பாக, 2021/22ஆம் பருவத்தில் பிரிவு மூன்றில் ஒரு போட்டித் தொடரில் இறுதிப் போட்டிவரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை முன்னேற்றிய பெருமை செல்ரனுக்கு உண்டு.
எவ்வாறிருப்பினும், பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் சுற்றுப் போட்டிகளை விட வடக்கின் பெரும் சமர் முழுமையாக வேறுபட்டது. எனவே, எப்பொழுதும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு கட்டாயம் தேவைப்படுகின்றது.
அவதானிக்க வேண்டியவர்கள்
அணியில் அனுபவம் மிக்க சிரேஷ்ட வீரர்களின் ஒருவராக உள்ள ஆனந்தன் கஜனுக்கே இம்முறை அணியை வழிநடாத்தும் தலைமைத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக அதிரடித் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் பிரகாசித்த இவர் இம்முறை அணியின் தலைவர் என்ற வகையில் நிதானம் கலந்த அதிரடியுடன் ஆடும் பட்சத்தில் அது நடப்புச் சம்பியன்களுக்கு மிகப் பெரிய தடையாகவே அமையும்.
கடந்த முறை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தோல்வியடைந்திருந்தாலும், அணியை தோல்வியில் இருந்து மீட்க கஜன் தனியாளாகப் போராடி அரைச் சதம் கடந்திருந்தமையை சென் ஜோன்ஸ் வீரர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அணியின் முன்வரிசை துடுப்பாட்டத்திற்கு பலம் சேர்க்கும் நம்பிக்கைக்குறியவராக மற்றொரு அனுபவ வீரரான சன்சயன் உள்ளார். இவர் இரண்டு நாட்கள் போட்டியை விட ஒருநாள் போட்டிகளிலேயே தனது சிறந்த பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், வடக்கின் பெரும் சமரில் இவர் களத்தில் நிலைத்து நிற்பது ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.
யாழ் மத்திய கல்லூரிக்காக சதம் மற்றும் பல அரைச் சதங்களை விலாசியுள்ள துடுப்பாட்ட வீரரே நிசான்தன் அஜேய். அணியின் கடந்த கால வெற்றிகளுக்கு தனியாளாக இவர் பங்காற்றிய சந்தர்ப்பங்களும் பல.
அது போன்றே, துடுப்பாட்டத்தில் எந்தவொரு இடத்திலும் களமிறங்கி ஓட்டங்களைக் குவிக்கும் விதுசனின் துடுப்பாட்டத்தையும் இம்முறை பெரும் போட்டியில் யாழ்பாணம் மத்திய கல்லூரி நம்பி உள்ளது.
மற்றொரு சகலதுறை வீரராக அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றும் வீரர்தான் ரன்ஜித்குமார் நியூற்றன். துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறும் பல சந்தர்ப்பங்களில் பந்துவீச்சில் இவர் அணிக்கு பலம் சேர்த்துள்ளார். இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த வருட பெரும் போட்டியில் இவர் மொத்தமாக பெற்ற 4 விக்கெட்டுக்களைக் குறிப்பிடலாம்.
இறுதியாக,
வட மாகாணத்தில் மாத்திரமன்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் உள்ள இரு கல்லூரிகளினதும் பழைய மாணவர்களின் ஒரே எதிர்பார்ப்பு இந்த பெரும் போட்டி நடைபெறும் மூன்று நாட்களின் நிறைவில் தனது தாய் கல்வியகம் வெற்றிவாகை சூட வேண்டும் என்பதாகும்.
அந்த ஒரே பெருமைக்காக களத்தில் மோதும் வீரர்களின் இந்த மூன்று நாள் பிரகாசிப்பின் நோக்கம் தமது தனிப்பட்ட ஆற்றலை வெளிக்கொண்டு வருவது மாத்திரமன்றி, போட்டி நிறைவில் தன் கல்லூரியின் வெற்றிச் செய்தி உலகில் பேசப்பட வேண்டும் என்பதுமாகும்.
எனினும், யாழ் மத்திய கல்லூரி மைதானத்தை சூழ்ந்துகொள்ளும் ரசிகர் படை, அவர்களின் கோசங்கள், ஒவ்வொரு விக்கெட்டிற்கும், ஒவ்வொரு அரைச் சதத்திற்கும் பின்னர் தமது கல்லூரி கொடிகளுடன் மைதானத்திற்குள் குதிக்கும் ஆதரவாளர்களுக்கு மத்தியில் இந்த இளம் வீரர்கள் தம் திறமையை காண்பிப்பது மிகப் பெரிய சவாலாகவே அமையும். அந்த சவாலை வெற்றி கொள்வதே இந்த சமரின் ரசனையாகவும் இருக்கும்.
எனவே, எதிர்வரும் 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த 116ஆவது பெரும் போட்டியின் உடனடித் தகவல்கள், சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com உடன் இணைந்திருங்கள்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<