வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில்

893

இந்திய இளையோர் அணிக்கெதிராக எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டித் தொடருக்கான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலனாகவே வியாஸ்காந்துக்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

எனினும், அவரை மேலதிக வீரராக இணைத்துக் கொள்ள தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலதுகை சுழல் பந்துவீச்சாளரான வியாஸ்காந்த், அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரில் மேல், வட மத்திய மற்றும் வட மேல் மாகாண அணிகளுடனான போட்டியில் பந்துவீச்சில் அசத்தியிருந்ததுடன், வட மாகாண அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். அதுமாத்திரமின்றி, அணிக்கு தேவையான நேரத்தில் துடுப்பாட்டத்திலும் அசத்தியிருந்தார்.

இதேநேரம், இம்முறை இடம்பெற்ற 112ஆவது வடக்கின் மாபெரும் சமரில் யாழ். மத்திய கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவரான வியாஸ்காந்த், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண ஒரு நாள் தொடரில் வட மாகாண அணியின் தலைவராகச் செயற்பட்ட யாழ் மத்திய கல்லூரியின் வேகப்பந்துவீசும் சகலதுறை வீரரான எஸ். மதுசன் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெறவில்லை. குறித்த போட்டித் தொடரில் அவர் வட மேல் மாகாண அணிக்கு எதிராக 6 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்திலும் வேகமாக 34 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேலும், இவ்வருட வடக்கின் மாபெரும் சமரிலும் அதிரடியாக அரைச்சதம் கடந்து யாழ். மத்திய கல்லூரியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய வீரராகவும் இருந்தார்.

எனினும், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், .19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்குமிடையில் நாளை (13) கொழும்பு என்.சி.சி மைதானத்தில் ஆரம்பமாவுள்ள இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் வியாஸ்காந்த் மற்றும் மதுசன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்க தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி, நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை கொழும்பு, மொறட்டுவை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இளம் இலங்கை அணி இன்று (12) அறிவிக்கப்பட்டது.

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவராக வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த சகலதுறை ஆட்டக்காரரான நிபுன் தனஞ்சய பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வரிசையில் பிராகாசித்து வருகின்ற சுழல் பந்துவீச்சாளரான நிபுன் தனஞ்சய, முன்னதாக இவ்வருட முற்பகுதியில் நியூசிலாந்தில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமிலும் இடம்பெற்றிருந்தார்.

அதேபோன்று, இம்முறை இளையோர் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பிளேட் கிண்ணத்தை வென்ற கமிந்து மெண்டிஸ் தலைமையிலான இலங்கை இளையோர் அணியில் இடம்பெற்றிருந்த மொறட்டுவை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்க, புனித தோமியர் கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளரான கலன பெரேரா, காலி மஹிந்த கல்லூரியின் வலதுகை மித வேகப்பந்துவீச்சாளரான நிபுன் மாலிங்க மற்றும் மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரியின் மத்திய வரிசை வீரர் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம், இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் தலைவரான கமிந்து மெண்டிஸின் சகோதரரான காலி றிச்மண்ட கல்லூரியைச் சேர்ந்த சந்துன் மெண்டிஸும் 15 பேர் கொண்ட இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம், மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த 15 வயதுடைய இளம் வீரரான துனித் வெல்லாலகேவும் இந்திய அணிக்கெதிரான இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணித் தேர்வு மற்றும் பயிற்சிகளை பிரதான பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன, இலங்கை மகளிர் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் முதற்தடவையாக இடம்பெற்ற யாழ். மத்திய கல்லூரி மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கும், அவரது பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை சமூகத்துக்கும் ThePapare.com இணையத்தளம் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


நான்கு நாள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விபரம்

நிபுன் தனஞ்சய பெரேரா (அணித் தலைவர் – வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி), பசிந்து சன்ஜுல சூரிய பண்டார (கொழும்பு றோயல் கல்லூரி), நுவனிந்து கேஷவ பெர்னாண்டோ (மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரி), நவோத் தினுஷ்ரி பரனவிதான (காலி மஹிந்த கல்லூரி), நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ (விக்கெட் காப்பாளர் – மொறட்டுவை மகா வித்தியாலயம்), கமில் மிஷ்ரா (கொழும்பு றோயல் கல்லூரி), துனித் நெத்மிக வெல்லாலகே (காலி புனித ஜோசப் கல்லூரி), சதுன் தாரக்க மெண்டிஸ் (காலி றிச்மண்ட் கல்லூரி), புபுது பண்டார (கண்டி திரித்துவக் கல்லூரி), ஷஷிக்க டில்ஷான் (மாத்தறை புனித செவேர்ஷியஸ் கல்லூரி), நவோத்ய இமேஷ் விஜயகுமார (கண்டி புனித அந்தோனியார் கல்லூரி), கலன விச்சித்ர பெரேரா (கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி), நிபுன் மாலிங்க (காலி மஹிந்த கல்லூரி), கல்ஹார சமிந்த சேனாரத்ன (கடுகஸ்தோட்டை புனித அந்தேனியார் கல்லூரி), நவீன் நிர்மால் பெர்னாண்டோ (நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)

மேலதிக வீரர்கள் விபரம்

ஷிஹான் கலிந்து (மாத்தறை புனித செவேர்ஷியஸ் கல்லூரி), விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), சொனால் தினுஷ்க (கொழும்பு மஹானாம கல்லூரி), லஷித ரசஞ்சன மனசிங்க (கொழும்பு நாலாந்த கல்லூரி)

போட்டி அட்டவணை

முதலாவது டெஸ்ட் போட்டி ஜுலை 17 முதல் 20 வரை கொழும்பு NCC மைதானம்
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜுலை 24 முதல் 27 வரை அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம்
முதலாவது ஒரு நாள் போட்டி ஜுலை 30 கொழும்பு பி. சரவணமுத்து மைதானம்
இரண்டாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 02 SSC மைதானம்
மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 05 SSC மைதானம்
நான்காவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 07 மொறட்டுவை டிரோன் பெர்னாண்டோ மைதானம்
ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 10 மொறட்டுவை டிரோன் பெர்னாண்டோ மைதானம்

இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான அனைத்து போட்டிகளும் டயலொக் தொலைக்காட்சி 01 மற்றும் ThePapare.com இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அத்துடன், போட்டித் தொடரின் அனைத்து விபரங்களையும் ThePapare.com  ஊடாக பெற்றுக்கொள்ள இணைந்திருங்கள்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க