சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கும் இங்கிலாந்து வீரர்

England Tour India 2024

173
England Tour India 2024

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் போது முழங்கால் உபாதைக்குள்ளாகிய இங்கிலாந்து அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஜெக் லீச்சிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சியில் இன்று (26) நிறைவுக்கு வந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்ததோடு, டெஸ்ட் தொடரையும் 3க்கு 1 என வென்று சாதனை படைத்துள்ளது.

இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக ஹைதராபத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இடது கால் முட்டியில் ஜெக் லீச் காயமடைந்தார். அதன் பின்னர் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை என்பதுடன், உடனடியாக நாடு திரும்பியிருந்தார்.

இதேவேளை, இந்தியாவுடனான முதல் டெஸ்ட்டியின் போது உபாதைக்குள்ளாகிய ஜெக் லீச்சிற்கு நாளை (27) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் இங்கிலாந்தின் கோடைக்கால சர்வதேசப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கு முன் ஏப்ரலில் கவுண்டி சம்பியன்ஷிப் உள்ளூர் தொடரும் ஆரம்பமாகவுள்ளது. எனவே, குறித்த 2 தொடர்களுக்கும் முன் ஜெக் லீச் பூரண குணமடைந்து போட்டிகளுக்கு திரும்புவார் என நம்பப்படுகிறது.