உலகின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் செய்த சிறந்த செயல்களைப் போல தானும் இலங்கையில் செய்ய விரும்புவதாக இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் இத்தாலியில் வைத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பங்குபற்றுதலுடன் இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கை தூதரகத்தில் யுபுன் அபேகோனுக்கான ஒரு விசேட பாராட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது.
இதன்போது யுபுன் அபேகோனின் பயிற்றுவிப்பாளர் கிளாடியோ லிகார்டெல்லோ, உதவிப் பயிற்றுவிப்பாளர் மொரிசியோ ரபரெல்லி, பிசியோதெரபிஸ்ட் மேட்டியோ கல்டெரிசி மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் ஜகத் வெல்லவத்த மற்றும் ரோமில் வசிக்கும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், குறித்த பாராட்டு விழாவின் போது விளையாட்டுத்துறை அமைச்சரினால் யுபுன் அபேகோனுக்கு விசேட நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக, யுபுன் அபேகோனையும் அவரது பயிற்சியாளர் உள்ளிட்ட மெய்வல்லுனர் அணியில் உள்ள வீரர்களையும் விளையாட்டுத்துறை அமைச்சர் யுபுன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இடத்துக்கு நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
- இலங்கைக்காக வரலாற்று வெண்கலத்தை வென்ற யுபுன் அபேகோன்!
- டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் யுபுன்
- உலக மெய்வல்லுனர் தரவரிசையில் யுபுன் அதிசிறந்த முன்னேற்றம்
இதன்போது, யுபுனின் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குவதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் தாம் உட்பட இலங்கையர்கள் தயாராக இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
யுபுனைப் போன்ற ஒரு வீரர் ஆசியாவிற்கு பெருமை சேர்ப்பவர் என்றும், எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கமொன்றை எதிர்பார்க்கலாம் என்றும் நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் திறமையான வீரர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு யுபுனின் பயிற்சியாளரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது உரையாற்றிய யுபுன் அபேகோன், ”என்னுடைய கடந்த கால சாதனைகள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதைப்பற்றி மீண்டும் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை. எதிர்காலத்தில் இன்னும் சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுக்க எதிர்பார்த்துள்ளேன். இலங்கையில் மெய்வல்லுனர் விளையாட்டை இத்தாலியைப் போல தொழில்முறை விளையாட்டாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தில் தற்போது நான் களமிறங்கியுள்ளேன். அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மிகப் பெரிய ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றார். இலங்கையின் விளையாட்டுத்துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான மிகப் பெரிய குறிக்கோள் எனக்கு உண்டு. எனவே என்னுடைய வேலைத்திட்டங்களுக்கு அனைவரது பங்களிப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
அதேபோல, சிறுவயதில் உசைன் போல்ட், யொஹான் பிளேக் உள்ளிட்ட வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு தான் நான் மெய்வல்லுனர் விளையாட்டை தேர்ந்தெடுத்தேன். ஜமைக்கா போன்ற மிகவும் வறிய நாடொன்றில் இருந்து உசைன் போல்ட் விளையாட்டுக்காக ஆற்றிய சேவைகள் ஏராளம். ஆரம்ப காலத்தில் உசைன் போல்ட்டுக்கு ஓடுவதற்குக் கூட சப்பாத்து இருக்கவில்லை. எனினும், 16, 17 வயதாகும் போது அவருக்கு பூமா நிறுவனத்தினால் மில்லியன் ரூபா ஒப்பந்தம் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை உசைன் போல்ட் கல்வி கற்ற பாடசாலையில் உள்ள எந்தவொரு மாணவருக்கும் சப்பாத்து இல்லாமல் ஓடுவதற்கான நிலை ஏற்படவில்லை. ஏனெனில் பூமா நிறுவனம் அந்தப் பாடசாலைக்கு வாழ்நாள் முழுவதும் சப்பாத்துக்களை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்குக் காரணம் உசைன் போல்ட். எனக்கும் அதேபோன்ற ஒரு திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. அனைவருக்கும் செய்ய முடியாவிட்டாலும், என்னால் முடிந்தளவு உதவியை செய்ய எதிர்பார்த்துள்ளேன். குறிப்பாக இதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருக்காது. நான் தனிப்பட்ட முறையில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன்” என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யுபுன் பயிற்சி பெறுகின்ற இடத்தில் உள்ள வீரர்கள் பயிற்சி அளிக்கும் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல இடங்களையும் அமைச்சர் இதன்போது பார்வையிட்டார்.
இதனிடையே, இலங்கைக்கு வருமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் அழைப்பை யுபுனின் பயிற்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<