கால்பந்திற்கு நடந்த நிலை கிரிக்கெட்டிற்கும் நடக்கிறது: கபில் தேவ் எச்சரிக்கை

267

சர்வதேச கால்பந்து போட்டிக்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் நடக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உலகளவில் அதிகமான T20 லீக் தொடர்கள் நடப்பது டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டின் அழிவிற்கு வழிவகுக்கும் என்பதால் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை பாதுகாக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலம் குறித்து Sydney Morning Herald பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகின்ற பெரும்பாலான நாடுகள் தனித்தனியாக T20 தொடர்களை நடத்தி வருகின்றன. இந்தியாவில் IPL தொடர் நடப்பதைப் போல் பிக்பேஷ் லீக், பாகிஸ்தான் சுபர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக், லங்கா பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு T20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் தென்னாபிரிக்க T20 லீக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய T20 லீக் என மேலும் 2 லீக் தொடர்கள் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவெனில் தென்னாபிரிக்காவில் நடக்கும் T20 தொடருக்கான அணிகளை IPL அணி உரிமையாளார்களே வாங்கியுள்ளனர். இப்படியாக உலகின் பல்வேறு நாடுகளில் T20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

T20 தொடர்களில் விளையாடுவதன் மூலம் குறைவான நேரத்தில் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதால் கிரிக்கெட் வீரர்களும் T20 லீக் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், T20 லீக் கிரிக்கெட் போட்டிகள் அதிகமாக நடத்தப்படுவதால், டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

மேலும் சர்வதேச டெஸ்ட், ஒருநாள், T20 கிரிக்கெட் போட்டிகளை தவிர அதிகப்படியான T20 லீக் தொடர்கள் நடத்தப்படுவதால் பணிச்சுமை காரணமாக பல முன்னணி வீரர்கள் அண்மைக்காலமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுகின்றனர்.

இதில் இங்கிலாந்து சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோல ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பணிச்சுமை காரணமாக சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள புதிய T20 லீக் தொடர் காரணமாக அதே மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை இரத்து செய்தது.

இந்த நிலையில், கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து இந்திய அணிக்கு 1983இல் முதல் முறையாக ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த கபில் தேவ் கருத்து தெரிவிக்கையில்,

”இது சர்வதேச கிரிக்கெட்டை அழித்து வருவதாக நான் நினைக்கிறேன். இந்த ஒருநாள் கிரிக்கெட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் ஐசிசிக்கு பெரிய பொறுப்புள்ளது. தற்போதைய கிரிக்கெட் வளர்ச்சி ஐரோப்பாவில் நிலவும் கால்பந்தை நோக்கி செல்கிறது. அதாவது ஐரோப்பாவில் கால்பந்து போட்டிகளில் நடப்பதைப் போன்று ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் நடக்கப்போகிறது.

அதில் ஒவ்வொரு நாடும் மற்றைய நாட்டுக்கு எதிராக விளையாடாமல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் (உலகக் கிண்ணத்தில்) மோதிக்கொள்கிறார்கள். எனவே கால்பந்தைப் போல உலகக் கிண்ணத்தில் மட்டும் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி விட்டு எஞ்சிய நேரங்களில் கழகமட்டப் போட்டிகளில் அல்லது T20 லீக் தொடர்களில் விளையாட போகிறோம்.

இதோடு நாட்டுக்காக ஆடாமல் பணத்துக்காக ஆடுகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் IPL அல்லது பிக்பேஷ் போன்ற தொடர்களில் விளையாடினால் போதும் என்று நினைக்கிறார்களா? எனவே இந்த அம்சத்தில் ஐசிசி அதிக நேரத்தை செலவழித்து கழகமட்ட கிரிக்கெட்டுக்கு மத்தியில் எப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும் என்று பார்க்க வேண்டும்.

கழகமட்ட கிரிக்கெட், IPL மற்றும் பிக்பேஷ் போன்ற தொடர்கள் நீண்டகாலம் நடைபெற்று வருகிறது. இதோடு தற்போது தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளும் புதிய T20 தொடர்களை அறிமுகப்படுத்தவுள்ளதால் அனைத்து வீரர்களும் இவ்வாறு T20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்கள். மேலும் சர்வதேச கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மட்டும் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்” என்று கபில் தேவ் எச்சரித்துள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<