செரண்டிப் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இஸ்ஸடீன் நியமனம்

853
Issadeen

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இலங்கை இராணுவப்படை கால்பந்து அணியின் முன்னணி வீரருமான மொஹமட் இஸ்ஸடீன், மாவனல்லை செரண்டிப் கால்பந்துக் கழக அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் டிவிஷன் l போட்டித் தொடரில் விளையாடும் முக்கிய அணிகளில் ஒன்றாக உள்ள செரண்டிப் விளையாட்டுக் கழகம், கடந்த இரண்டு பருவகால தொடர்களிலும் காலிறுதிச் சுற்று வரை முன்னேறியிருந்தது.

ஜாவா லேனை வீழ்த்தி மீண்டும் FA கிண்ண சம்பியனாகியது இராணுவப்படை

இஸ்ஸடீன் மற்றும் அசிகுர் ரஹ்மான் ஆகியோரின் இரட்டை கோல்களின்..

அதேபோன்றே, அண்மையில் நிறைவுற்ற இந்த பருவகால FA கிண்ணப் போட்டிகளில் பல அணிகளை வீழ்த்தி இறுதி 32 அணிகளைக் கொண்ட சுற்று வரை செரண்டிப் அணி முன்னேறியிருந்தது.

எனினும், எதிர்வரும் டிவிஷன் l தொடரில் சம்பியன் பட்டம் வென்று, இலங்கையின் முதல்தரத் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கு கொள்ளும் நோக்குடன் உள்ளது செரண்டிப் அணி. இதற்கான ஒரு முயற்சியாகவே, இஸ்ஸடீன் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த செரண்டிப் கால்பந்துக் கழகத்தின் முகாமையாளர் மொஹமட் நௌசில், ”அடுத்த முறை சம்பியன்ஸ் லீக்கில் விளையாடும் இலக்குடனே நாம் உள்ளோம். அதற்கான ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர் எமக்குத் தேவையாக இருந்தது. அந்த வகையில் இஸ்ஸடீனின் கடந்த கால பயிற்றுவிப்பு திறமைகளைப் பார்க்கும்பொழுது, அவரே எமது அணிக்கு சிறந்தவராக கருதப்பட்டார்.

இலங்கைக் கால்பந்தில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட இவர் எம்முடன் இணைவது, எமது இளம் வீரர்களுக்கு மிகப் பெரிய அனுபவத்தையும், அவர்களில் சிறந்த மாற்றங்களையும் பெற்றுக் கொடுக்கும். அதுவே அணியின் முன்னேற்றத்திற்கு சிறந்த பங்கு வகிக்கும். இவரது வருகையினால் எமது அணியில் பெரிய மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.  

இலங்கைக் கால்பந்தில் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள மொஹமட் இஸ்ஸடீன், தனது திறமையின்மூலம் பல சாதனைகளை படைத்தது மாத்திரமன்றி, இன்றும் தனக்கென ஒரு சிறப்பிடத்தையும் பதித்துள்ளார்.

முன்னணி கால்பந்து அணியான இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரரான இவர், அணியின் சிரேஷ்ட வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். அதேபோன்றே, தனது அனுவம் மற்றும் திறமை என்பவற்றின்மூலம் அணியின் கோல் இயந்திரமாகவும் செயற்படுகின்றார்.

கடந்த வருட FA கிண்ணத் தொடரில் அதிக கோல்களைப் பெற்ற வீரராக கருதப்படும் இவர், அண்மையில் நிறைவுற்ற இந்த பருவகாலப் போட்டிகளிலும், மூன்று ஹட்ரிக் கோல்களுடன் அதிக கோல்களைப் பெற்ற வீரருக்கான தங்கப் பாதணியையும் பெற்றுக்கொண்டார்.

பலத்த போராட்டத்தின் பின் செரண்டிப் அணியை தோற்கடித்த சுபர் சன்

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற FA கிண்ணத்தின்..

இவரது பயிற்றுவிப்பு சேவையைப் பார்க்கும்பொழுது, திஹாரிய யூத் அணியை சம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேற்றிய மிகப் பெரிய பங்கு இவருக்கு உண்டு. திஹாரிய யூத் அணிக்கு தொடர்ந்து நான்கு வருடங்கள் பயிற்சி வழங்கிய இவர், தனது மூன்றாவது வருடத்தில் அவ்வணியை டிவிஷன் l தொடரின் சம்பியனாக முடிசூட வைத்தார்.   

கடந்த 2015ஆம் பருவகால டிவிஷன் l போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கம்பளை கிறிஸ்டல் பெலஸ் விளையாட்டுக் கழக அணியை வீழ்த்திய திஹாரிய யூத், தொடரில் சம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றியின் மூலம் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை அவ்வணி முதல் முறையாகப் பெற்றது.  

செரண்டிப் அணியுடனான இணைவு குறித்து ThePapare.com இடம் கருத்து தெரிவித்த மொஹமட் இஸ்ஸடீன், ”இந்த அணி தேசிய அளவில் உள்ள சிறந்த அணிகளில் ஒன்று. தற்பொழுது அணியின் நிலை மிகவும் சிறந்த மட்டத்தில் உள்ளது. அனுபவம் மிக்க சிறந்த வீரர்கள் குழாமில் உள்ளனர்.

குறிப்பாக சிரேஷ்ட வீரர் ஷெரோன் அணியில் இருப்பது எனக்கு மிகப் பெரிய பலம். காரணம் திஹாரிய யூத் அணியில் அவர் என்னோடு இணைந்து செயற்பட்டவர். எனவே, எம் இருவருக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வு செரண்டிப் அணியின் வளர்ச்சிக்கு ஒரு மேலதிக அனுகூலமாக இருக்கும்.  இவர்களை சம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு முன்னேற்றும் இலக்குடனேயே நான் செயற்படுவேன்” எனக் குறிப்பிட்டார்.

செரண்டிப் அணியின் எதிர்கால வளர்ச்சிக்கு குழாமில் புதிய வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளதா? என்ற எமது கேள்விக்கு பதிலளித்த அவர்,

”செரண்டிப் நிர்வாகத்திடம் புதிய வீரர்களை இணைப்பதற்கான திட்டம் உள்ளது. எனினும், அவர்களது பிரதேசத்தில் இருந்து சிறந்த வீரர்களை அணியில் புதிதாக இணைப்பதே அவர்களது கால்பந்து வளர்ச்சிக்கு சிறந்த வழிமுறையாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்” என்று தனது ஆலோசனையை அவர் பகிர்ந்துகொண்டார். 

முதல்தரப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் சங்கக்கார

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில்..

இம்முறை டிவிஷன் l சுற்றுத் தொடரைப் பொருத்தவரை சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடிய சில அணிகள் தரமிறக்கப்பட்டு, இத்தொடரில் மோதவுள்ளன. அதேபோன்றே கடந்த முறை மோதிய பல அணிகள், தம்மில் பல வகையான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் செய்து இம்முறை சம்பியனாகும் கனவுகளுடன் களமிறங்கவுள்ளன.  

இந்நிலையில் செரண்டிப் அணியின் குழாமை உரிய முறையில் இனங்கண்டு, வீரர்களின் உடற்தகுதியின் நிலைமை, அதேபோன்று இளம் மற்றும் அனுபவ வீரர்களை ஒன்றிணைத்து அணியை பலப்படுத்துவதற்கான திட்டங்களை முறையே அவதானித்து அணியை வழிநடாத்த வேண்டிய பாரிய பொறுப்பு இஸ்ஸடீனிடம் உள்ளது.   

எவ்வாறிருப்பினும், இளம் வீரர்களை இவ்வணி புதிதாக உள்ளவாங்குமாயின் அது அவ்வீரர்கள் பயிற்றுவிப்பாளர் இஸ்ஸடீன் மூலம் எண்ணிலடங்கா அனுபவங்கைளப் பெறுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செரண்டிப் கால்பந்துக் கழகத்தின் இந்த பயிற்றுவிப்பாளர் தெரிவு குறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள் .

 மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க