ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இஸ் சோதி

202

நியூசிலாந்து  கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி, இந்தியான் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரி என இரண்டு பதவிகளில் செயற்படவுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டின் சாதனைகளும், சம்பவங்களும் – 2019 மீள் பார்வை

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல சுவாரஷ்யமான சம்பவங்கள் மற்றும்…

இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இஸ் சோதி, ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சாய்ராஜ் பஹதுலே மற்றும் தலைமை செயற்பாட்டு நிர்வாகி ஜெக் லஸ் மெக்ரம் ஆகியோருடன் இணைந்து செயற்படவுள்ளார். 

இஸ் சோதி நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், ஐ.பி.எல். தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இதில், மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடிய இவர், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்தநிலையிலேயே அவர் தற்போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரியாக செயற்படவுள்ளார்.

இஸ் சோதியின் இந்த நியமனங்கள் குறித்து ராஜஸ்தான் கிரிக்கெட்டின் தலைவர் ஷுபின் பஹருச்சா குறிப்பிடுகையில், “ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் புதிய பணியில் இணையும் இஸ் சோதியை அன்புடன் அழைக்கிறோம். இவருக்கு இரண்டு பணிகளை கொடுத்ததற்கான காரணம், எம்மிடம் இருக்கும் இளம் வீரர்கள் மைதானத்தில் சிறந்த முறையில் விளையாட ஊக்குவிக்க வேண்டும். அத்துடன், அவரது புதிய பணிக்காக அனைத்து ராஜஸ்தான் றோயல்ஸ் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றார்.

அதேவேளை, தன்னுடைய இந்த இரண்டு பணிகள் குறித்து இஸ் சோதி கருத்துகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், 

“ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இந்த புதிய சவாலை எதிர்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் கடந்த இரண்டு பருவங்களாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளேன். அணியில் உள்ள வீரர்கள் தொடர்பில் எனக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. அணியில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளனர். 

ராஜஸ்தான் அணி, எனக்கு இந்த பணியை கொடுத்த பின்னர், நான் எதனையும் சிந்திக்கவில்லை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். நான் மிகவும் விரும்பும் அணிக்கு இந்தமுறை ஐ.பி.எல். தொடரில் உதவுவது எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

இஸ் சோதி நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், ராஜஸ்தான் அணியின் இந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஐ.பி.எல். பருவகாலத்தில் இலங்கை அணிக்காக விளையாடிவந்த லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். எனினும், கடந்த ஆண்டு அவர் மீண்டும் மும்பை அணியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<