ISAC மெய்வல்லுனரில் தினெத், செனெலா சிறந்த வீரர்களாக தெரிவு

22nd ISAC 2024

230
ISAC 2024

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (25) நிறைவடைந்த 22ஆவது சர்வதேச பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன், இம்முறை போட்டித் தொடரை நடாத்திய கொழும்பு கேட்வே கல்லூரி 2ஆவது இடத்தைப் பிடித்தது.

கொழும்பு கேட்வே கல்லூரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற 22ஆவது சர்வதேச பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (ISAC) போட்டி கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நாட்டின் முன்னணி சர்வதேச பாடசாலைகள் பங்கேற்றிய இம்முறை போட்டித் தொடரில் 24 பாடசாலைகளிலிருந்து 2000க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

கடந்த 2 நாட்களாக இம்முறை போட்டித் தொடரில் 803 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை அணி ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியது. இதனிடையே, 756 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு கேட்வே கல்லூரி அணி 2ஆவது இடத்தையும், 358 புள்ளிகளைப் பெற்ற பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை அணி 3ஆவது இடத்தையும் பிடித்தது.

இதனிடையே, இம்முறை போட்டித் தொடரின் அதி சிறந்த வீரர் மற்றும் ஆண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனராக பாணந்துறை லீட்ஸ் சர்வதேச பாடசாலையின் குறுந்தூர ஓட்ட வீரர் தினெத் ஐ வீரரத்னவும், பெண்களுக்கான அதி சிறந்த மெய்வல்லுனராக கொழும்பு கேட்வே கல்லூரியைச் சேர்ந்த குறுந்தூர ஓட்ட வீராங்கனை செனெலா செனவிரத்னவும் தெரிவாகினர்.

இதில் 20 வயதின்கீழ் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.62 செக்கன்களில் நிறைவுசெய்த தினெத் புதிய போட்டிச் சாதனையை நிகழ்த்தியதுடன், செனெலா செனவிரத்ன பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 12.20 செக்கன்களில் ஓடியிருந்தார்.

இதேவேளை, இம்முறை சர்வதேச பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 32 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 15 போட்டிச் சாதனைகளும். பெண்கள் பிரிவில் 17 போட்டிச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் ஒரு முந்தைய போட்டி சாதனை சமப்படுத்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<