பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டமிழந்த விதம் சர்வதேச கிரிக்கெட்டில் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் பங்களாதேஷ் அணித்தலைவர் சகீப் அல் ஹஸன் வீசிய 25வது ஓவரில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்திருந்தார். இதனைத்தொடர்ந்து அஞ்செலோ மெதிவ்ஸ் துடுப்பெடுத்தாட களமிறங்கினார்.
>>இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை
அஞ்செலோ மெதிவ்ஸ் துடுப்பெடுத்தாட களமிறங்கியதுடன், ஆடுகளத்தில் பந்தை எதிர்கொள்வதற்கு தயாராகினார். எனினும் அவருடைய ஹெல்மட்டின் பட்டி அறுந்திருந்ததை அவதானித்த மெதிவ்ஸ், வேறு ஒரு ஹெல்மட்டை கொண்டு வருமாறு மேலதிக வீரர்களிடம் கூறினார்.
எனினும் களத்திற்கு வருகைத்தந்து 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்வதற்கு அஞ்செலோ மெதிவ்ஸ் தயாராகாத நிலையில், சகீப் அல் ஹசன் நடுவரிடம் ஆட்டமிழப்பை கோரினார். எனவே ஐசிசியின் விதிமுறைப்படி அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஐசிசியின் விதிமுறைப்படி துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டமிழந்தால் அல்லது ஓய்வை பெற்றுக்கொண்டால் புதிதாக வரும் துடுப்பாட்ட வீரர் அல்லது மறுமுனையில் இருக்கும் துடுப்பாட்ட வீரர் 2 நிமிடங்களுக்குள் துடுப்பெடுத்தாட தயாராக வேண்டும். இவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் புதிதாக களமிறங்கிய துடுப்பாட்ட வீரர் நேரம் முடிந்த காரணத்தால் (Timed Out) ஆட்டமிழந்ததாக கருதப்படுவார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நேரம் முடிந்த காரணத்திற்காக ஆட்டமிழக்கும் முதலாவது வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய பெயரை இன்று பதிவுசெய்துக்கொண்டார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<