இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இர்பான் பதான் ஓய்வில் இருந்து மீண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2003 இல், அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில், இர்பான் பதான் தனது 19ஆவது வயதில் அறிமுகமானார். ஆனால் கடந்த 2014 இல் இவரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தது.
வலதுகை மித வேகப்பந்துவீச்சாளரான இர்பான் பதான், 29 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 100 விக்கெட்டுக்களையும், 120 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
கடந்த 2006 இல் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் ஹெட்ரிக் விக்கெட் கைப்பற்றினார்.
அதேபோல் 24 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான், 28 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதில் கடந்த 2007இல் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.
எனினும், இர்பான் பதான் இவ்வருட முற்பகுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசியபோது ஓய்வில் இருந்து திரும்பி வந்து மீண்டும் இந்தியாவுக்கு விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ”தகவல் தான் மிகவும் முக்கியமானது. என்னிடம் வந்து இர்பான் நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள். ஆனால் இந்திய அணியின் தேர்வுக்கு ஒரு ஆண்டுக்கு நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள் என சொன்னால் மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மனதார கடினமாக உழைக்க ஆரம்பித்துவிடுவேன். ஆனால் இந்த தகவலை யார் தெரிவிப்பார்கள் என்பது தான் முக்கியம்.
இதேபோல இன்னும் சில மாதத்தில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கவுள்ளது. நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்களை தேர்வு செய்வது குறித்து சிந்திப்போம் என உங்களிடம் சொன்னால் நீங்கள் தயாராக மாட்டீர்களா ரெய்னா? என்று இர்பாதான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து திரும்பி வந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது ஒன்றும் புதிதல்ல. மிகச்சிறந்த வீரர்களான இம்ரான் கான், ஜாவித் மியாந்தத், கெவின் பீட்டர்சன், கார்ல் கூப்பர் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
ஆனால் இந்திய கிரிக்கெட்டில் இப்படி வீரர்கள் ஓய்வில் இருந்து திரும்பி வந்து கிரிக்கெட் விளையாடுவது கடினம். இந்நிலையில், இர்பான் பதான் ஓய்வில் இருந்து மீண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<