லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட இர்பான் பதான் மறுப்பு

1285
Image Courtesy: Getty Image

இலங்கையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் தான் விளையாடவுள்ளதாக வெளியாகிய செய்தியினை முற்றிலும் மறுப்பதாக இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது லங்கா ப்ரீமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டி இம்மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

லன்கன் ப்ரீமியர் லீக் திகதி அறிவிப்பு

இதில் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

23 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவுள்ள இம்முறை போட்டிகள் அனைத்தும் ஆர். பிரேமதாஸ, தம்புள்ளை, பல்லேகலை மற்றும் சூரியவெவ ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஓவ்வொரு அணியிலும் 6 வெளிநாட்டு வீரர்களுடன், 8 உள்ளூர் வீரர்களும், ஒரு 19 வயதுக்கு உட்பட்ட வீரரும் இடம்பெறவுள்ளனர்.

இதேநேரம், நியூசிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்டில், இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் இர்பான் பதான், தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான ஹஷிம் அம்லா மற்றும் வேர்ணன் பிளாண்டர் உட்பட சுமார் 100 வெளிநாட்டு வீரர்கள் லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனாலும், அவர்களின் 30 பேருக்கு மாத்திரம் வாய்ப்பு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

Video – இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL?? | Cricket Galatta Epi 31

எனினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எந்தெந்த நாட்டு வீரர்கள் எல்.பி.எல் தொடரில் விளையாடுவார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வரும் நிலையில், நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் விளையாடுவதற்கு கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரரான இர்பான் பதான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதனை மறுத்து இர்பான் பதான் தனது டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,

அந்நிய மண்ணியில் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன். ஆனால் இதுவரை எந்த ஒரு தொடரிலும் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

35 வயதான இர்பான் பதான், ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைஸிங் புனே மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

தற்போது இந்தியாவின் பிராந்திய கழகங்களில் ஜம்மு – காஷ்மிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இதேநேரம், எல்.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு விரும்புகின்ற வெளிநாட்டு வீரர்களை 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் முதல் 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரையான பணப்பெறுமதிக்கு ஒப்பந்தம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் T20 போட்டிகளில் விளையாட தயாராகும் பங்களாதேஷ்

அத்துடன், வெளிநாட்டு வீரர்களை அழைத்து வருவதற்கு பிரத்தியேக விமானம் ஒன்றை பெற்றுக்கொள்ளவும் இலங்கை கிரிக்கெட் சபை அவதானம் செலுத்தியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<