கடந்த ஆண்டு ஐ.சி.சி. இன் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் ஒன்றான அயர்லாந்து அணி அதன் கன்னி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?
கடந்த வெள்ளிக்கிழமை (11) ஆரம்பமான இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்திருந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக இமாம் உல் ஹக் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் அறிமுக வீரர்களாக இணைக்கப்படிருந்தனர்.
இப்போட்டியில் விளையாடிய அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் போய்ட் ரான்கின் ஐ.சி.சி. இன் மூன்று வகையான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20) இரண்டு தேசிய அணிகளுக்காக விளையாடிய முதலாவது வீரர் என்ற பெறுமையை பெற்றுக்கொண்டார். அவர் ஏற்கனவே இங்கிலாந்து அணி சார்பாக ஒரு டெஸ்ட் போட்டி, இரண்டு டி 20 போட்டிகள் மற்றும் 7 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்கள் பெற்றிருந்த போது அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழ அவ்வணி சற்று தடுமாறியது. தொடர்ந்து அவ்வணிக்கு இணைப்பாட்டங்கள் கைகொடுக்காததனால் 159 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது சடாப் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணிக்கு வழுச்சேர்த்தனர். அறிமுக வீரரான பஹீம் அஷ்ரப் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் 52 பந்துகளில் அரைச்சதம் கடந்து பாகிஸ்தான் அணி சார்பாக அறிமுக டெஸ்ட் போட்டியில் வேகமாக அரைச்சதம் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
புதிய மாற்றங்களுடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு?
மூன்றாவது நாளில் 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த ஜோடி ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்டுக்களை இழக்க 9 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்கள் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பாக அதி கூடிய ஓட்டங்களாக 83 ஓட்டங்களை பஹீம் அஷ்ரப் பெற்றதோடு அஸாத் ஷபீக் ஓட்டங்களையும் 62 மற்றும் சடாப் கான் 55 ஓட்டங்களையும் பெற்று தமது அணிக்கு பங்களிப்பு செய்தனர். அயர்லாந்து அணி சார்பாக பந்துவீச்சில் டிம் மர்தா 4 விக்கெட்டுகளையும் தொம்சன் 3 விக்கெட்டுகளையும் மற்றும் ரான்கின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 130 ஓட்டங்களுள் சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியை விட 180 ஓட்டங்களால் பின்தங்கி இருந்தது. அவ்வணி சார்பாக கெவின் ஒப்ரைன் 40 ஓட்டங்களையும் G. வில்சன் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் சடாப் கான் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
பலோ ஒன் (follow on) முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களை பெற்று வழுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் அவ்வணி சற்று தடுமாற்றதை எதிர் கொண்ட போதும் கெவின் ஓப்ரைனின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் அயர்லாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது.
ஹேரத், லக்மால் ஆகியோர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே
நான்காம் நாள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை பெற்றிருந்தது. கெவின் ஒப்ரைன் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபின் விளையாடிய முதல் போட்டியில் சதமடித்த நான்காவது வீரராக அவர் வரலாற்றில் இடம் பிடித்தார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் சார்லஸ் பென்னேர்மன், ஜிம்பாப்வேயின் டேவ் ஹப்டன் மற்றும் பங்களாதேஷ் அணியின் அமீனுல் இஸ்லாம் ஆகியோர் தமது நாட்டின் தேசிய அணி விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்களாவர்.
தொடர்ந்து போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அயர்லாந்து அணி மேலதிகமாக 20 ஓட்டங்களை சேர்த்திருந்த நிலையில் 339 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் அவ்வணி பாகிஸ்தான் அணியை விட 159 ஓட்டங்கள் மேலதிகமாக பெற்றிருந்தது. அயர்லாந்து அணி சார்பாக கெவின் ஒப்ரைன் 118 ஓட்டங்களையும் தொம்சன் 53 ஓட்டங்களையும் பெற்று தமது அணிக்கு பங்களிப்புச் செய்திருந்தனர்.
பந்துவீச்சில் மொஹமட் அப்பாஸ் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோர் முறையே 5 மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்ததியிருந்தனர். இப்போட்டியில் அயர்லாந்து அணியின் அன்ட்ரு பல்பரேனி அறிமுக டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சுளிலும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அந்தஸ்து உள்ள அனைத்து நாடுகளும் இந்த மோசமான சாதனையை படைத்திருக்கின்றனர் என்பதும் இலங்கை அணி சார்பாக இந்த சாதனை முன்னால் அணித்தலைவர் மாவன் அட்டபத்து பெற்றுள்ளார் என்பதும் முக்கிய அம்சமாகும்.
160 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அஸாம் ஆகியோர் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது பாபர் அஸாம் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் பாபர் அஸாம் 59 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக அயர்லாந்து அணியின் கெவின் ஓப்ரைன் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க