அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

291
ICC

அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பேர்டி மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற முதலாவது T-20 போட்டியில், ஹஷரதுல்லாஹ் ஷஷியின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட T-20  தொடர் நேற்று ஆரம்பமாகியது. இறுதியாக பங்களாதேஷ் அணியுடன் பெறப்பட்ட தொடர் வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் நம்பிக்கையுடன் நேற்றைய போட்டியில் களமிறங்கியது.

ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷுக்கு ‘வைட்வொஷ்’ தோல்வி

போட்டியின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட, ஆட்டம் அணிக்கு தலா 18 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு வழங்கியது.  

இதனடிப்படையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் அணிக்குள் உள்வாங்கப்பட்ட ஹஷரதுல்லாஹ் ஷஷி அயர்லாந்து பந்து வீச்சாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். 22 பந்துகளில் அரைச்சதத்தை கடந்த இவர் மொத்தமாக 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இவருக்கு அடுத்தப்படியாக அணித் தலைவர் அஸ்ஹார் அப்கான் 31 ஓட்டங்களையும், மொஹமட் சேஷார்ட் 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. அயர்லாந்து அணியின் பந்து வீச்சில் டைரோன் கேன் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஜொசூவா லிட்டில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், 161 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஓட்டங்களை பெற முயன்ற வேளையில், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணித் தலைவர் கெரி வில்சன் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் போல் ஸ்டைர்லிங் மாத்திரம் போராடிய போதும், வெற்றியிலக்கை அடைய முடியாமல் 16 ஓட்டங்களால் அயர்லாந்து அணி தோல்வியை தழுவியது.

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) தொடருக்கு ஐசிசி அங்கீகாரம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்த திட்டமிட்டிருந்த,…

இறுதிவரை துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. கெரி வில்சன் 34 ஓட்டங்களையும், போல் ஸ்டைர்லிங் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீட் கான் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அப்டப் அலாம் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் T-20 போட்டியில் வெற்றிபெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T-20 போட்டி நாளை (22) நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

ஆப்கானிஸ்தான் 160/7 (18), ஹஷரதுல்லாஹ் ஷஷி 74 (34), அஸ்ஹார் அப்கான் 31 (30), டைரோன் கேன் 29/2, ஜொசூவா லிட்டில் 20/2

அயர்லாந்து –  144/9 (18), கெரி வில்சன் 34 (23), போல் ஸ்டைர்லிங் 27 (19), ரஷீட் கான் 35/3

போட்டி முடிவு ஆப்கானிஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி