இரண்டாவது டெஸ்டில் மாற்றங்கள் மேற்கொள்ளுமா இலங்கை?

637

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்க, தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி திங்கட்கிழமை (24) காலியில் ஆரம்பமாகின்றது.

சூர்யகுமார், கிரீனின் பிரகாசிப்புகள் வீண் ; பஞ்சாப் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி,  இரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் என்பதன் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் முன்னர் குறிப்பிட்டதனைப் போன்று இலங்கை 280 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி என நினைவு கூறக் கூடிய வகையிலான ஒரு வெற்றியினைப் பதிவு செய்ததோடு குறித்த வெற்றி காரணமாக அழுத்தங்களும் இலங்கை அணிக்கு இரண்டாவது டெஸ்டில் குறைந்திருக்கின்றன.

இரண்டாவது டெஸ்டில் மாற்றங்கள்?

அழுத்தமின்றிய நிலையானது இரண்டாவது டெஸ்டில் இலங்கை மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதற்கான நிலைமை ஒன்றினைத் தோற்றுவித்திருக்கின்றது.

சுழலுக்கு அதிக சாதகம் கொண்ட காலி மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக அசித பெர்னாண்டோ இருந்த போதும் அவரினை இலங்கை முதல் டெஸ்டில் பெரிதாக உபயோகம் செய்ததனை அவதானிக்க முடியவில்லை.

எனவே இரண்டாவது டெஸ்டில் அவருக்குப் பதிலாக இலங்கை மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி அணியின் மூன்றாவது சுழல் வீரராக பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸிற்கு மேலதிகமாக அறிமுக வீரர் துஷான் ஹேமன்தவிற்கு வாய்ப்பு வழங்கப்பட எதிர்பார்க்கப்பட முடியும்.

மணிக்கட்டு சுழல்வீரரான துஷான் ஹேமன்த இதுவரை 44 முதல்தரப் போட்டிகளில் ஆடிய அனுபவத்தினைக் கொண்டிருப்பதோடு அதில் மொத்தமாக 98 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றார். அத்துடன் அவர் அண்மையில் நிறைவடைந்த தேசிய சுபர் லீக் தொடர்களில் (ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் தொடர்களில்) சிறப்பான பந்துவீச்சு பெறுதிகளை வெளிப்படுத்தியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மறுமுனையில் இலங்கை அணியினைப் பொறுத்தவரை துடுப்பாட்டவரிசையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே துடுப்பாட்ட வரிசையே இரண்டாவது டெஸ்டிலும் இருக்கும் என நம்பப்படுகின்றது.

அயர்லாந்து அணியுடன் இணைந்த போல் ஸ்டைர்லிங்!

சாதனை செய்வாரா பிரபாத் ஜயசூரிய?

ரங்கன ஹேரத்தின் ஓய்வின் பின்னர் இலங்கை அணி அவரின் பிரதியீட்டுப் பந்துவீச்சாளரை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஒன்றை எதிர் கொண்டிருந்தது என்றே கூற முடியும். எனினும் இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய நம்பிக்கையாக மாறியிருக்கும் பிரபாத் ஜயசூரிய, இலங்கை டெஸ்ட் அணியில் ரங்கன ஹேரத்தின் வெற்றிடத்தினை நிரப்புவார் என நம்பப்படுகின்றது.

இப்போது வெறும் 06 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆடியிருக்கும் 43 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருப்பதோடு அவர் 50 விக்கெட்டுக்களை கைப்பற்ற இன்னும் இன்னும் 7 விக்கெட்டுக்களே மேலதிகமாக தேவையாக இருக்கின்றது.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய இரண்டாவது டெஸ்டில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றுவார் எனில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்கிற சாதனையினை அவருக்கு தென்னாபிரிக்காவின் வெர்னோன் பிலாந்தார் மற்றும் இங்கிலாந்தின் காலம் சென்ற டொம் ரிச்சர்ட்ஸன் ஆகியோருடன் இணைந்து சமப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

சதீர சமரவிக்ரமவின் மீள் வருகை

உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசித்ததன் அடிப்படையில் 2017ஆம் ஆண்டிலேயே இலங்கை அணியில் வாய்ப்பினை பெற்ற போதும் சதீர சமரவிக்ரமவினால் அதனை சரியாக உபயோகம் செய்ய முடியவில்லை.

ஆனால் அயர்லாந்து அணியுடனான முதல் போட்டி மூலம் சுமார் ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பினை பெற்றிருந்த சதீர சமரவிக்ரம தனது மீள் வருகைப் போட்டியில் அபார சதம் ஒன்றினை விளாசியிருந்ததோடு, தினேஷ் சந்திமாலுடன் இணைந்து இலங்கை அணியின் 7ஆம் விக்கெட்டுக்காக டெஸ்ட் போட்டிகளில் சாதனை இணைப்பாட்டத்தினையும் பதிவு செய்திருந்தார்.

சதீர சமரவிக்ரமவின் மீள் வருகை இலங்கை அணியின் மத்திய வரிசைக்கு பலம் சேர்த்துள்ளதோடு விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான நிரோஷன் டிக்வெல்ல இலங்கை டெஸ்ட் அணியில் மீள் நுழைய அதிக சவாலை எதிர் கொள்ள வேண்டிய நிலையினையும் உருவாக்கியிருக்கின்றது.

வாக்குறுதியினை நிறைவேற்றத் தொடங்கியிருக்கும் தினேஷ் சந்திமால்

குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தனவின் பின்னர் இலங்கை அணிக்கு நம்பிக்கை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்டவீரர்களில் ஒருவர் தான் தினேஷ் சந்திமால். அவரினால் தொடர்ச்சியாக இலங்கை அணிக்கு ஏனைய வகை கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்க முடியாமல் போனாலும் டெஸ்ட் போட்டிகளில் அணியின் துடுப்பாட்ட நம்பிக்கையாக தொடர்ந்தும் காணப்பட்டு வந்திருந்தார்.

அதிலும் குறிப்பாக 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தினேஷ் சந்திமால் ஒரு புதுவகையான டெஸ்ட் துடுப்பாட்டவீரராக அவதாரம் எடுத்திருக்கின்றார். இதனை இலக்கங்களும் உறுதிப்படுத்துகின்றன.

2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை (2023 ஏப்ரல் வரை) டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்டவீரர்களின் பட்டியலை எடுத்து நோக்கும் போது அதில் மொத்தமாக 11 துடுப்பாட்டவீரர்கள் மாத்திரம் காணப்படுகின்றனர். இந்த 11 துடுப்பாட்டவீரர்களிலும் அதிக துடுப்பாட்ட சராசரியினைக் (91) கொண்ட துடுப்பாட்டவீரராக தினேஷ் சந்திமாலே காணப்படுகின்றார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட்டமிழக்காது சதம் கடந்த தினேஷ் சந்திமாலின் குறித்த துடுப்பாட்ட சராசரியானது 2022ஆம் ஆரம்பத்தில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி துடுப்பாட்டவீரர்களாக காணப்படும் இங்கிலாந்தின் ஜோ ரூட், அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபச்சேனே, ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோரை விட அதிகமாகும்.

இந்த விடயங்கள் தினேஷ் சந்திமால் தான் இலங்கை அணிக்கு ஒரு துடுப்பாட்ட பலமாக இருப்பார் என முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியினை நிறைவேற்றி வருவதற்கு சான்றாக அமைகின்றது. எனவே சந்திமாலின் ஓட்ட வேட்டை அயர்லாந்துடனான இரண்டாவது டெஸ்ட்டிலும் தொடரும் என நம்பப்படுகின்றது.

அயர்லாந்து அணியின் டெஸ்ட் அனுபவம்

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அயர்லாந்து அணி புதியது அவர்களின் அனுபவம் குறைவானது என்கின்ற போதும் அயர்லாந்து அணியினை குறைவாக மதிப்பிட்டு விட முடியாது. ஆற்றல் கொண்ட அதிக வீரர்களுடனேயே அயர்லாந்தின் டெஸ்ட் அணி கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

அயர்லாந்து டெஸ்ட் அணியின் தலைவரான அன்ட்ரூ பல்பைனி இங்கிலாந்தின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட ஒருவர், அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக களமிறங்கிய ஜேம்ஸ் மெக்கொல்லமிற்கும் அதே வகையிலான அனுபவம் காணப்படுகின்றது.

இவர்கள் ஒரு புறமிருக்க அணியில் வளர்ந்து வரும் துடுப்பாட்டவீரர்களாக காணப்படும் லோர்கன் டக்கர், ஹர்ரி டெக்டர் மற்றும் சகலதுறைவீரர் கேர்டிஸ் கேம்பர் ஆகியோரும் நம்பிக்கை தருபவர்களாக காணப்படுகின்றனர்.

மறுமுனையில் அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது மணிக்கட்டு சுழல்வீரரான பென் வைட், இடதுகை சுழல்வீரர் டொக்ரல் ஆகியோர் காலி மண்ணின் சாதகங்களை தங்களுக்காக உபயோகம் செய்யக் கூடிய திறமைகளை கொண்டிருக்கின்றனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்கா A அணி

ஒரு வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக இருக்கும் அயர்லாந்திற்கு இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அத்துடன் அணியின் அதிக அனுபவமிக்க துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான போல் ஸ்டேர்லிங் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இணைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணிக்கு அயர்லாந்து சவால் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<