ஒருநாள் போட்டிகளை போன்றே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் தான் துடுப்பெடுத்தாடுவதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சிக்கமைய முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இலங்கை வீரர்கள் முதல் நாள் ஆட்ட நிறைவின்போது அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சதங்களுடன் 4 விக்கெட்டுக்களை இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
- திமுத் – மெண்டிஸ் இணைப்பாட்டத்ததுடன் முதல் நாளில் வலுப்பெற்ற இலங்கை
- இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
- சாம்சன், ஹெட்மேயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி
- Photos – Ireland tour of Sri Lanka 2023 | 1st Test – Day 01
முதல் நாள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட குசல் மெண்டில் 193 பந்துகளில் 140 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இது அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 போட்டிகளின் பின்னர் பெற்ற சதமாகும்.
இந்த நிலையில் முதல் நாள் ஆட்ட நிறைவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குசல் மெண்டிஸ், ”கடந்த காலங்களில் எனக்கு அதிகமாக அரைச் சதங்களையே பெற முடிந்தது. அணிக்கு தேவையான பல நேரங்களில் என்னால் சதம் பெறும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. எனினும், இந்தப் போட்டியில் விக்கெட் ஒன்று வீழ்த்தப்பட்ட நிலையில் அணிக்கு தேவையானதை என்னால் செய்ய முடிந்தது. எனவே, நீண்ட நாட்களின் பின்னர் சதம் பெறக் கிடைத்தமை மற்றும் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க கிடைத்தமை எனக்கு சிறந்த மகிழ்ச்சியை தருகின்றது.
தனது துடுப்பாட்ட முறை குறித்து அவர் குறிப்பிடுகையில், ”அண்மைக்காலமாக எனது துடுப்பாட்டம் சிறந்த விதத்தில் உள்ளது. கடந்த 8 வருடங்களாக நான் தேசிய அணிக்காக விளையாடுகிறேன். அந்த அனுபவத்தினால்தான் அணிக்காகவும் நாட்டுக்காகவும் என்னால் சிறந்த முறையில் ஆட முடிகின்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஆரம்பத்தில் அடித்தாட மாட்டேன். புதிய பந்து என்பதனால் பந்து அதிகம் சுழல முடியும். எனவே, அதனை அவதானிப்பேன். பின்னர் எனது பொதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்துவேன். ஒவ்வொரு ஓட்டமாகப் பெறுவதை தொடர்ச்சியாக செய்து வருகின்றேன். இலகுவான பந்துகளுக்கு பெண்டரிகளை பெறுவேன். டெஸ்ட் கிரிக்கெட்டை T20 போட்டி போன்று விளையாட முடியாது. எனினும், நான் டெஸ்டை கிரிக்கெட்டையும் ஒருநாள் போட்டி போன்றே ஆடுகின்றேன்” என்றார்.
இலங்கை அணி இறுதியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை பெற இந்த இரு போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை வீரர்கள் குறித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டனர்.
குறிப்பாக, இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் நியூசிலாந்தில் அவ்வணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்டனர். இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து வீரர்களின் பந்துவீச்சு குறித்து குசல் குறிப்பிடுகையில், ”நியூசிலாந்தின் பந்துவீசும் தன்மை முழுமையாக வேறுபட்டது. எனினும், இங்கு அவ்வாறு இல்லை. இங்குள்ள நிலைமை எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் துடுப்பாடினால் எமக்கு தேவையான விதத்தில் ஆடலாம்.
ஆனால், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுடன் அயர்லாந்து வீரர்களை ஒப்பிட முடியாது. ஆனால் இவர்களிடமும் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களது திட்டங்களும் வித்தியாசமானது” என்றார்.
காலி சர்வதேச மைதானம் இலங்கை வீரர்களுக்கு டெஸ்டில் தமது கோட்டை என்று கூற முடியும். துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் இலங்கை வீரர்களே இங்கு ஆதிக்கம் செலுத்துவர். இந்த டெஸ்டில் காலி ஆடுகளம் குறித்து குசல் மெண்டிஸ் குறிப்பிடுகையில், ”நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நான்கு நாட்களில் இங்கு வந்தோம். ஏனைய நாட்களை விட இம்முறை காலியில் அதிக உஷ்னத்தை உணர்ந்தோம். எனவே, இந்த காலநிலையில் நீண்ட நேரம் ஆடுவது சற்று கடினமாக உள்ளது.
ஆடுகளத்தை பற்றி குறிப்பிடுவதானால் மிகவும் சிறப்பாக உள்ளது. ஏனைய நாட்களை விட வித்தியாசமான ஒரு ஆடுகளம் கிடைத்துள்ளது. எனவே, துடுப்பாட்ட வீரர்கள் 400 அல்லது 500 ஓட்டங்களைப் பெறுவார்கள் என்றால் சிறந்தது. அவ்வாறு சிறந்த ஒரு இலக்கை வழங்கினால் எமக்கு சிறந்த முறையில் முன்னோக்கி செல்லலாம்” எனத் தெரிவித்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<