மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு இரண்டாமிடம்

CAVA Beach Volleyball Championship 2024

34

இலங்கையில் நடைபெற்ற மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப்பில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன.  

ஈரான் மற்றும் கஸகஸ்தான் ஆகிய அணிகள் இலங்கையை வீழ்த்தி முறையே ஆடவர் மற்றும் மகளிர் சம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம், இந்த ஆண்டு (2025) தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஆசிய கடற்கரை கரப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்) சம்பியன்ஷிப்பில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக் கொண்டது 

அதேபோல, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையும் ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பயின்ஷிப்பில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை உறுதி செய்தது.   

இலங்கை கரப்பந்து சம்மேளனம் மற்றும் மத்திய ஆசிய கரப்பந்து சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப் கடந்த 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் நடைபெற்றது. இம்முறை போட்டித் தொடரில் இலங்கை, கஸகஸ்தான், மாலைத்தீவுகள், பூட்டான், ஈரான் மற்றும் கிரிகிஸ்தான் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 18 அணிகள் பங்குபற்றின.   

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று ஆடவர் மற்றும் மூன்று மகளிர் அணிகள் பங்கேற்றதுடன், 3 மகளிர் அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. அதே நேரத்தில் 2 ஆடவர் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன 

இந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த திலீப சாமிக்க மற்றும் மலித் சில்வா ஜோடி ஈரான் அணியிடம் 2-0 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. ஆனால், ஆரம்ப சுற்றுப் போட்டியில் இதே ஈரான் அணியை 2-1 என்ற செட் கணக்கில் இலங்கை ஜோடி தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது 

இதனிடையே, மகளிர் இறுதிப் போட்டியில், தீபிகா பண்டார மற்றும் கசுனி தாருகா ஜோடி கஸகஸ்தானிடம் 2-0 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது..  

இதற்கிடையில், ஆடவர் பிரிவில் சந்துன் மதுஷங்க மற்றும் அஞ்சன சந்தீபன ஜோடி நான்காவது இடத்தைப் பிடித்தனர். அதே நேரத்தில், இலங்கை அணிகள் பங்கேற்ற மகளிர் பிரிவு மூன்றாம் இடத்திற்கான போட்டியில், ஷெஹானி அசங்க மற்றும் சத்துரிகா மதுஷானி ஜோடி 2-0 என்ற செட் கணக்கில் வாசனா மதுமாலி மற்றும் கசுனி கேஷலா ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

அத்துடன், இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இலங்கை ஆடவர் அணியான நலின் பெரேரா மற்றும் மதுஷ விக்ரமசிங்க ஜோடி காலிறுதிக்கு முன்னேறினர் 

எனவே, இம்முறை நடைபெற்ற மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது 

இதேவேளை, மத்திய ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பெற்ற ஈரான் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்ற கஸகஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் சேர்ந்து, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றது.   

>>மேலும்பலவிளையாட்டுசெய்திகளைப்படிக்க<<