பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் நடப்புச் சம்பியன் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியினை 4 விக்கெட்டுக்களினால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
சம்சனின் கன்னி சதத்துடன் டெல்லி அணிக்கு வெற்றி
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
நேற்றைய தினம் விளையாடிய மும்பை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாத நிலையில், ஐதராபாத் அணியில் பங்களாதேஷ் வீரர் முஷ்தபிசுர் ரஹ்மான் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தவானும், டேவிட் வோர்னரும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் நீண்ட நேரம் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தாலும் மும்பை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள சற்று திணறினர்.
ஐதராபாத் அணி 10.2 ஓவரில் 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. 34 பந்துகளில் 49 ஓட்டங்களை எடுத்த நிலையில் வோர்னர், ஹர்பஜன் சிங் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஹூடா 9 ஓட்டங்களில் வெளியேற, தவான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த யுவராஜ் சிங் (5), கட்டிங் (20), விஜய் சங்கர் (1), ஓஜா (9), ரஷித் கான் (2) சொற்ப ஓட்டங்களில் வெளியேற ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ப்ரா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 159 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணியின் பார்த்திவ் படேல் அதிரடியாக விளையாட அணியின் ஓட்ட எண்ணிக்கை உயரத் தொடங்கியது.
பார்த்திவ் படேல் 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்களாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பட்லர் 14 (11) ஓட்டங்களையும், ரோகித் ஷர்மா 4 (4) ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ராணா மற்றும் க்ரூனல் பாண்டியா கூட்டணி அதிரடி காட்ட மும்பையின் ஓட்ட எண்ணிக்கை வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.
20 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசிய க்ரூனல் பாண்டியா 37 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் பென் கட்டிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
க்ரூனலை தொடர்ந்து ராணா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்களாக 45 ஓட்டங்களை பெற்றிருந்த போது புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கபுகெதர, ஷானகவின் சதங்களின் உதவியுடன் கண்டி மற்றும் காலி அணிகள் வெற்றி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை அணி சார்பில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்ப்ரா தெரிவானார்.
இதுவரையில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளன.
போட்டியின் சுருக்கம்
சன்ரைசஸ் ஹைதராபாத் : 158/8(20) – வோர்னர் 49(34), தவான் 48(43), பும்ப்ரா 24/3
மும்பை இந்தியன்ஸ் : 159/6(18.4) – ராணா 45(36), புவனேஷ்வர் குமார் 21/3)