10ஆவது ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இரண்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மைதானத்தில் இடம்பெற்ற நான்காவது போட்டியில் மெக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆறு விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட களம் இறங்கிய புனே அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர்.
போட்டியின் முதல் ஓவரிலேயே புனே அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மயாங்க் அகர்வால் ஓட்டங்கள் எதுவும் பெற்றுக்கொள்ளாத நிலையில் சந்தீப் சர்மாவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரஹானேவுடன் அணித்தலைவர் ஸ்டிவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். ரஹானே 19 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜனின் பந்து வீச்சில் மார்கஸ் ஸ்டாய்னிசிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ஸ்மித் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடி காட்ட, மறுமுனையில் MS தோனி 5 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றமளித்திருந்தார். பென் ஸ்டோக்ஸ் 32 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
மனோஜ் திவாரி ஆட்டமிழப்பின்றி 23 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் விளையாடிய தமிழக வீரர் நடராஜன் 3 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஹஷிம் அம்லா, மனன் வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மனன் வோரா 14 ஓட்டங்களிலும், அம்லா 28 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த சஹா 13 ஓட்டங்களிலும், அக்சர் பட்டேல் 24 ஓட்டங்களிலும், வெளியேற பஞ்சாப் அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெக்ஸ்வெல் மற்றும் மில்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இதனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மெக்ஸ்வெல் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கலாக 44 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 27 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் க்லென் மெக்ஸ்வெல் தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – 163/6 (20) – பென் ஸ்டோக்ஸ் 50(32), மனோஜ் திவாரி 40(23), சந்தீப் சர்மா 33/2, நடராஜன் 26/1
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 164/4 (19) – க்லென் மெக்ஸ்வெல் 44*, டேவிட் மில்லர் 30*, இம்ரான் தாஹிர் 29/2
இதேவேளை, இலங்கை நேரப்படி மாலை 8 மணியளவில் இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணியின் தலைவர் ஷேன் வொட்சன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி கிறிஸ் கெய்ல், வொட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கெய்ல் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மொரிசின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மந்தீப் சிங் 12 ஓட்டங்களில் வெளியேற, வொட்சன் 24 ஓட்டங்களில் ஓய்வறை திரும்பினார்.
அதன்பின் வந்த கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கலாக 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி துடுப்பெடுத்தாட களம் இறங்கியது.
டெல்லி அணி சார்பில் ரிஷப் பந்த் மாத்திரம் அரைச்சதம் கடந்த நிலையில் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதன்காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ஓட்டங்களை பெற்று 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கேதர் ஜாதவ் தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 157/8 (20) – கேதர் ஜாதவ் 69(37), ஷேன் வொட்சன் 24(24)
டெல்லி டேர்டெவில்ஸ் – 142/9 (20) – ரிஷப் பந்த் 57(36)