விறுவிறுப்பிற்கு பஞ்சம் இன்றி நடைபெற்று வரும் 10ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இரண்டு முக்கிய போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் மும்பை இந்தியன்ஸ்
சின்னச்சாமி மைதானத்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தற்போதைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPL போட்டிகளுக்கு தகுதியானவர்கள் அல்ல : முரளிதரன்
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விராட் கோலி, கெய்ல் ஆகியோர் களம் இறங்கினர்.
அதிரடி ஆட்டக்காரர்களான இவர்கள் இருவரையும் அதிரடியாக துடுப்பெடுத்தாட விடாமல் மும்பை பந்து வீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 பந்தில் 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். மறுமுனையில் காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கிய விராட் கோலி 47 பந்தில் 62 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது பொங்களூரு 15.3 ஓவர்கள் நிறைவில் 110 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குருணால் பாண்டியா பந்தில் ஆட்டமிழக்க, பெங்களூரு அணி 150 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதே சந்தேகமானது.
கேதர் ஜாதவ் (9), மந்தீப் சிங் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நெஹி இறுதி வரை ஆட்டமிழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 143 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, எதிரணியின் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.
பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி ஹட்ரிக் விக்கெட் வீழ்த்த 7 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்குள் முக்கிய நான்கு விக்கெட்டுக்களை இழந்தது திணறியது மும்பை.
அடுத்து வந்த ராணா 11 ஓட்டங்களில் வெளியேறினார். இதன்போது மும்பை அணி 8 ஓவரில் 33 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பின்னர் 6ஆவது விக்கெட்டுக்கு பொல்லார்டுடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் விக்கெட்டுக்களை காப்பாற்றுவதற்காக நிதானமாக விளையாடிய பொல்லார்ட் அதன்பின் அதிரடியாக விளையாடினார்.
13 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 70 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன்போது மும்பை அணியின் வெற்றிக்கு 42 பந்தில் 73 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அதன்பின் பொல்லார்ட் அதிரடி வாணவேடிக்கை விட ஆரம்பித்தார். 14ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் விளாசினார். 15ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பொல்லார்ட் அதற்கடுத்த ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்களை விளாசினார். 18ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் சிக்ஸ் விளாசிய பொல்லார்ட், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 70 ஓட்டங்களை குவித்தார்.
பொல்லார்டின் அதிரடியால் மும்பை அணியின் வெற்றி உறுதியானது. அடுத்து குருணால் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா 19ஆவது ஓவரின் 5ஆவது பந்தை சிக்சருக்கு விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். எனவே, மும்பை அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிரண் பொல்லார்ட் நேற்றைய போட்டியில் பெற்றுக்கொண்ட ஓட்டங்களோடு சேர்த்து T-20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 7000 ஓட்டங்கள் எனும் சாதனையை எட்டியுள்ளார்.
கிறிஸ் கெயில், ப்ரெண்டன் மெக்கலம், பிரட் ஹொட்ஜ், டேவிட் வோர்னர் ஆகியோர் முன்னதாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இந்தப் பட்டியலில் கெயில் 9997 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சை பொறுத்தவரையில் பெங்களுரு அணி சார்பாக 3ஆவது ஓவரை வீசிய சாமுவேல் பத்ரி 2 வது பந்தில் பார்த்திப் பட்டேலையும், 3 வது பந்தில் மக்லினகனையும், 4 வது பந்தில் நேரடியாக போல்ட் முறைமூலம் அணித்தலைவர் ரோஹித் சர்மாவையும் ஆட்டமிழக்க செய்து ஹட்ரிக் சாதனை படைத்தார். இந்த பருவகாலத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் ஹட்ரிக் சாதனை இதுவாகும்.
இலங்கை அணியின் ஸ்கொட்லாந்து சுற்றுப்பயணம் எதற்காக?
இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய பத்ரி 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
சாமுவேல் பத்ரி ஐ.பி.எல் இல் விளையாடும் 6ஆவது போட்டியிலேயே ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார். அத்தோடு T-20 போட்டி வரலாற்றில் 20 ஓட்டமற்ற ஓவர்கள் வீசிய ஒரே பந்துவீச்சாளரும் இவராவார்.
போட்டியின் சுருக்கம்
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு : 142/5(20) – விராட் கோலி 62(47),
மும்பை இந்தியன்ஸ் : 145/6(18.5) – பொலார்ட் 70(47), சாமுவேல் பத்ரி 9/4(4)
ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் எதிர் குஜராத் லயன்ஸ்
நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்கோட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஸ்மித் 43 ஓட்டங்களையும், மனோஜ் திவாரி 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நேற்றைய போட்டியில் அறிமுகமான அவுஸ்திரேலியாவின் அன்ரு டை ஹட்ரிக் சாதனை அடங்கலாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 172 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணிக்கு அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மெக்கலம்(49) மற்றும் டிவைன் ஸ்மித்(47) ஆகியோர் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 12 பந்துகள் மீதமிருக்க குஜராத் லயன்ஸ் அணிக்கு 7 விக்கெட்டுக்களால் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் நாயகனாக ஹட்ரிக் சாதனை படைத்த அன்ரு டை தேர்வானார்.
பூனே அணிக்கு இது தொடர்ச்சியான 3ஆவது தோல்வியாகவும், குஜராத் அணியின் முதலாவது வெற்றியாகவும் இந்த வெற்றி அமைந்தது.
போட்டியின் சுருக்கம்
ரைசிங் பூனே சூப்பர்ஜியன்ட்ஸ் : 171/8(20) – ஸ்மித் 43(28), மனோஜ் திவாரி 31, அன்ரு டை 17/5(4)
குஜராத் லயன்ஸ் : 172/3(18) – ஸ்மித் 47(30), மெக்கலம் 49(32)