இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) வீரர்கள் தக்கவைப்பிலிருந்து, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவந்த இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய இசுரு உதான ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல். அணி வீரர்களின் வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு மற்றும் ஏனைய அணிகளுக்கு வீரர்களை மாற்றுவதற்கான வாய்ப்பினை ஐ.பி.எல். நிர்வாகம் வழங்கியுள்ளது. அதன்படி, அணிகள் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை அணியில் இணைத்துக்கொண்டு, ஏனைய வீரர்களை விடுவிப்பதுடன், ஐ.பி.எல். ஏலத்தின் போது, புதிய வீரர்களை அணிக்காக வாங்க முடியும்.
>>இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா<<
அதன் அடிப்படையில் இன்றைய தினம் (20) வெளியிடப்பட்ட வீரர்களின் விபரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்த லசித் மாலிங்கவை, அந்த அணி விடுவித்துள்ளது. லசித் மாலிங்க ஐ.பி.எல். தொடரில், இதுவரையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மாத்திரமே விளையாடியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியது மாத்திரமின்றி, அந்த அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராகவும் இணைந்திருந்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களாக 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், அந்த அணி 4 கிண்ணங்களை வெல்வதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஆண்டு அவர் வீரர்கள் தக்கவைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, கடந்த ஆண்டு கொவிட்-19 வைரஸ் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது. இந்த தொடரில், மும்பை அணிக்காக லசித் மாலிங்க இணைக்கப்பட்ட போதும், தொடரில் அணியுடன் அவர் இணையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி லசித் மாலிங்கவுடன், நெதன் குல்டர் நெயில், மிச்சல் மெக்லானகன் மற்றும் ஜேம்ஸ் பெட்டின்ஸன் ஆகிய முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களை அணியிலிருந்து விடுவித்துள்ளது.
அதேநேரம், முதன்முறையாக கடந்தவருட ஐ.பி.எல். தொடரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் சகலதுறை வீரரான இசுரு உதானவும் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இசுரு உதானவுடன் மொயீன் அலி, க்ரிஸ் மொரிஸ், அரோன் பின்ச் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், டேல் ஸ்டெய்ன் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதுமாத்திரமின்றி, இம்முறை நடைபெறவுள்ள வீரர்கள் தக்கவைப்பின் போது, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, தங்களுடைய புதிய தலைவரை நியமித்துள்ளது. அதன்படி, சஞ்சு சம்சுன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவராக செயற்படவுள்ளார். எனினும், அந்த அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டொம் கரன் மற்றும் ஓசான தோமஸ் ஆகிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து க்ளேன் மெக்ஸ்வேல் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், செல்டன் கொட்ரல், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஜேமஸ் நீஷம் ஆகிய முன்னணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அந்த அணியின் முக்கிய வீரரான ஷேன் வொட்சன், அனைத்துவகையான போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருடன் கேதர் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங் மற்றும் ப்யூஸ் சௌவ்லா ஆகிய முன்னணி வீரர்களும் வாய்ப்பை இழந்துள்ளனர். எனினும், கடந்த ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலகிய சுரேஷ் ரெய்னா, அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
>>“மெதிவ்ஸை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” – மிக்கி ஆர்தர்<<
கொல்கத்தா அணியை பொருத்தவரை பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக முன்னணி வீரர்களை குழாத்தில் வைத்துக்கொண்டுள்ளதுடன் க்ரிஸ் க்ரீன், டொம் பென்டன் மற்றும் ஹாரி கார்னி ஆகிய வெளிநாட்டு வீரர்களை விடுவித்துள்ளது. கொல்கத்தா அணி போன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. பெபியன் எலன் மற்றும் பில்லி ஸ்டென்லேக் ஆகிய வெளிநாட்டு வீரர்களை விடுவித்துள்ளது.
டெல்லி கெபிட்டல்ஸ் அணியை பார்க்கும் போது கீமோ போல், சந்தீப் லமச்சனே, ஜேசன் ரோய் மற்றும் அலெக்ஸ் கெரி போன்ற முன்னணி வீரர்களை நீக்கியுள்ளதுடன், டேனியல் செம்ஸ் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் டெல்லி அணியிலிருந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<