இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 18ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளதை, ஐ.பி.எல். நிர்வாகம் இன்றைய தினம் (27) உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் பெப்ரவரி 18ம் திகதி நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாகிவந்த நிலையில், இன்றைய தினம் இந்த தகவலை, ஐ.பி.எல். நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐ.சி.சி அறிமுகம்
அதேநேரம், வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள அணி உரிமையாளர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும், அணி உரிமையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் இரண்டு RT-PCR பரிசோதனையில் உரிமையாளர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிசெய்யப்படவேண்டும்.
குறிப்பாக, வீரர்கள் ஏலத்துக்கு வருகைத்தரும் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஏலம் நடைபெறும் தினத்துக்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் ஒரு RT-PCR பரிசோதனையிலும், ஏலம் நடைபெறும் இடத்தில் ஒரு RT-PCR பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும்.
ஐ.பி.எல். வீரர்கள் பரிமாற்றமானது பெப்ரவரி 11ம் திகதி நிறுத்தப்படுவதுடன், வீரர்கள் ஏலம் நிறைவுபெற்றதை தொடர்ந்து வீரர்கள் பரிமாற்றத்தை அணிகள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஐ.பி.எல். தொடர் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர், வீரர்கள் பறிமாற்றத்துக்கான காலம் நிறைவடையும்.
அதுமாத்திரமின்றி ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்துக்கு உரிமையாளர்கள் 13 உறுப்பினர்களை அழைத்துவரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 8 அங்கத்தவர்கள் ஏலத்தில் நேரடியாக கலந்துக்கொள்ள முடியும் என்பதுடன், மீதமுள்ளவர்கள் பார்வையாளர் அரங்கில் இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான பிரதான அனுசரணையாளர்களாக இருந்த ட்ரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தக்காலம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவுக்குவந்துள்ள நிலையில், புதிய அனுசரணையாளர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.
எவ்வாறாயினும், ஐ.பி.எல். தொடருக்கான அனுசரணையாளர்கள் ஒப்பந்தத்திலிருந்த விவோ (Vivo) நிறுவத்துக்கான கதவு திறக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக இவர்களுடன் மீண்டும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமா? என்ற சந்தேகம் நிழவுகின்றது.
ஐ.பி.எல். தொடரின் கடந்த ஆண்டுக்கான போட்டிகள், கொவிட்-19 வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது. வருட இறுதியில் நடைபெற்ற இந்தப் போட்டித்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<