9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 47ஆவது போட்டி நேற்று விசாகப்பட்டினம் டாக்டர் ராஜசேகர ரெட்டி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் சஹீர் கான் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதற்கிணங்க மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் களமிறங்கினர். முதல் விக்கட்டுக்காக 46 ஓட்டங்களைப் பகிர்ந்த பின் ரோஹித் ஷர்மா 31 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த மார்டின் கப்டிலும், குர்ணால் பாண்டியாவும் சிறப்பாக ஆடி 2ஆவது விக்கட்டுக்காக 98 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். அதன் பின் கப்டில் 48 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார்.
அதிரடியாக விளையாடிய குர்ணால் பாண்டியா டெல்லி பந்து வீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்து ஓட்டங்களைக் குவித்தார். 37 பந்துகளை சந்தித்த குர்ணால் பாண்டியா 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 86 ஓட்டங்களைக் குவித்தார். இந்த அதிரடியின் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது. டெல்லி அணி சார்பாக மொரிஸ் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 207 ஓட்டங்கள் என்ற பாரிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கட்டுகளை இழந்து, 19.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. டெல்லி அணி சார்பாக டி கொக் 40 ஓட்டங்களையும், மொரிஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை அணியின் பந்துவீச்சில் பும்ரா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக குர்ணால் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்